மலேசியாவில் புதிய பாதுகாப்பு சட்டம் அமல்

மலேசியாவில், பிரதமர் நஜிப் ரஜாக்குக்கு பரந்துபட்ட புதிய அதிகாரங்களைத் தரும் பாதுகாப்பு சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மலேசியாவில் புதிய பாதுகாப்பு சட்டம்

நாட்டில் எந்தப் பகுதியையும் பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்க நஜிப்புக்கு அது அதிகாரம் வழங்குகிறது.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதியில், போலிசார், மக்கள் மீதும், வாகனங்களிலும் கட்டிடங்களிலும், நீதிமன்ற உத்தரவில்லாமல் தேடுதல் வேட்டை நடத்த முடியும்.

இந்த சட்டம் பயங்கரவாதத்தை முறியடிக்கத் தேவையானது என்று பிரதமர் நஜிப் ரஜாக் கூறுகிறார். ஆனால் இந்த சட்டம் அரசின் எதிர்ப்பாளர்களை ஒடுக்கவே பயன்படுத்தப்படும் என்று பலர் அஞ்சுகின்றனர்.

பிரதமர் ரஜாக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலேசிய அரசு நிதியம் ஒன்றின் மீது நடந்து வரும் சர்வதேச மோசடி விசாரணை ஒன்று காரணமாக , ரஜாக் அதிகரித்து வரும் அழுத்தத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.