வெனிசுவேலா: நிகோலஸ் மடுரோவின் பதவி நீக்கத்துக்கு முயலும் எதிர்க்கட்சிகளுக்கு முதல் வெற்றி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மடுரோவை அவரது பதவியிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்ள அந்நாட்டின் எதிர்கட்சிகள் நடத்தி வரும் பரப்புரையின் முதல் கட்டத்துக்கு, தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக வெனிசுவேலாவின் தேர்தல் சபை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

நிகோலஸ் மடுரோவை அவரது பதவியிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்து, வெனிசுவேலாவில் உள்ள 24 மாநிலங்களிலும் ஒரு சதவீத அளவுக்கு வாக்காளர்களிடமிருந்து கையெழுத்துக்களை எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளதாக தேர்தல் சபை தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் வெற்றி பெற்றால், நாட்டின் இடது சாரி அதிபரான நிகோலஸ் மடுரோவின் பதவி நீக்கத்துக்கு இது வழிவகுக்கும்.

அடுத்த கட்டத்தில், வெனிசுலா அதிபரின் போட்டியாளர்கள், தங்கள் முயற்சிக்கு இருபது சதவீத ஆதரவினை பெற வேண்டும். இது நான்கு மில்லியன் கையெழுத்துக்கள் அளவு வரை இருக்கும்.

இந்நிலையில், மேலும் ஒரு திருப்பமாக, வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம், நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை இடைநீக்கம் செய்துள்ளது.

வாக்குகளை வாங்கியதாக விசாரணை செய்யப்பட்டு வரும் மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கும் வரை, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.