சார்லி ஹெப்டொ தாக்குதல்தாரியின் உறவினரை ஒப்படைக்க பல்கேரியாவிடம் பிரான்ஸ் கோரிக்கை

கடந்த வருடம் சார்லி ஹெப்டொ வார இதழ் மீது தாக்குதல் நடத்தியவரின் மைத்துனரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு பல்கேரியாவிடம் பிரான்ஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

பல்கேரிய அரசு வழக்கறிஞர்கள் சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பில் சேருவதாக சந்தேகித்து, மொரத் ஹம்யத்தை ஜுலை மாத இறுதியில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

அந்த 20 வயது மாணவரின் நடவடிக்கைகள் வெளிநாட்டு போராளியைப் போன்று இருந்ததால் அவர் அடையாளம் காணப்பட்டார் என பல்கேரியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் சார்லி ஹெப்டொ செய்தித்தாள் அலுவலகத்தில் 11 பேரை கொன்ற சகோதரர்களில் ஒருவரை மொரத் ஹம்யத்தின் சகோதரி திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.