எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption காணாமல் போன விமானத்தில் பயணித்த உறவினர்களின் துயரம் (கோப்புப்படம்)

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் எம்.எச் 370, நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி (6 ஆயிரம் மீட்டர்) வேகத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம்.எச். 370 விமானத்தின் தானியங்கி சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய தகவல்களும், போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தின் பதிவிறக்கங்களும் தெரிவிக்கும் தகவல்களின்படி, அந்த விமானம் தற்போது தேடப்படும் பகுதியில்தான் கடலுக்குள் விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணைய தலைமை ஆணையர் கிரேக் ஹூட் தெரிவித்தார்.

அந்த விமானம் காணாமல் போனபோது, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குப் பறந்து கொண்டிருந்தது.