ஆப்கன்: கடும் போருக்கு நடுவிலும் வினியோகப் பாதையை மீட்டுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள லஷ்கார் காவிற்கு அருகில் கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், நகரக் குடிமக்களுக்கு வினியோகப் பொருட்களை கொண்டு வருகின்ற முக்கிய பாதையை மீண்டும் திறந்திருப்பதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

ஆப்கான் அரசப் படைக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான கடும் மோதலால் கந்தஹாரிலிருந்து வரும் சாலை மூடப்பட்டதால், உலக உணவு திட்டத்தின் இருப்புகள் உள்பட பல பொருட்களின் வினியோகம் வெகுநாட்களாக தடுக்கப்பட்டிருந்தது.

இந்த வன்முறையின் காரணமாக, பல நோயாளிகளும், காயமுற்றோரும் ஹெல்மண்ட் மாகாணத்தில் முக்கிய நகரான லஷ்கார் காவில் இருக்கும் 300 படுக்கை வசதியுடைய அறக்கட்டளை மருத்துவமனையை சென்றடைய போராடி வருகிறார்கள்.