பிரிட்டன்: மருத்துவமனை சுவரிலிருந்து தேன் கசிந்த வினோதம்

படத்தின் காப்புரிமை SPL

பிரிட்டனின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சுவர் வழியாக தேன் கீழே சொட்டியதை அங்கிருந்த வயது முதிர்ந்த நோயாளிகள் கவனித்ததை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த வாரம் அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இரு பெரிய தேன் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி வளர்ப்பு வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.

குறைந்தது 5 வருடங்களாக இந்த தேனீக்கள் அங்கு கவனிக்கப்படாமல் இருந்து, அவை பல்லாயிரக்கணக்கில் பெருக காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போது, வெப்பமான வானிலை காரணமாக அதன் அடை மற்றும் தேன் உருகி மேற்கூரை வழியாக கசிந்துள்ளது.

அங்கிருந்த தேனீக்களை முழுமையாக அகற்றி காலியான தேன் கூடுகளுக்கு இடமாற்றுவதற்கு தேனி வளர்ப்பு வல்லுநர்களுக்கு ஒரு வாரமானது.

இந்த பணிகளுக்கு பிறகு அங்கு மிஞ்சியுள்ள பெரிய அளவிலான தேன் அடை, சோப், மெழுகுவர்த்தி மற்றும் மரச்சாமான் மெருகுப்பொருள் செய்யவதற்கு பயன்படுத்தப்படும்.