ராபர்ட் முகாபேயை பதவியிறக்க தயாராகும் துணை அதிபர்

ஜிம்பாப்வேயின் தற்போதுள்ள அனுபவம் வாய்ந்த அதிபரான ராபட் முகாபேயை பதவியிலிருந்து நீக்க முக்கிய எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் தனக்கு மகிழ்ச்சியே என முன்னாள் துணை அதிபர் ஜாய்ஸ் முஜுரூ தெரிவித்துள்ளார்.

Image caption ராபட் முகாபே

ஜிம்பாப்வே மக்களின் நலனுக்காக, மார்கன் ஸ்வாங்கிராயால் முன்னிறுத்தப்படும் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துடனும், மற்றும் பிறருடனும் சேர்ந்து பணிபுரிய தான் தயாராக இருப்பதாக பிபிசியிடம் அவர் தெரிவித்துள்ளார்

இவ்வருட தொடக்கத்தில், ஆளும் கட்சியான சானு-பிஎஃப் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனிக்கட்சி தொடங்கினார்.

92 வயதாகும் அதிபர் முகாபே அடுத்த முறையும் மற்றொரு பதவிக்காலத்துக்காக தேர்தலில் போட்டியிட எண்ணியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமீப வாரங்களில் ஜிம்பாப்வேயில் பொருளாதாரம் மோசமாகி வருவதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.