மனித பாதுகாப்பு கேடயத்தில் தப்பும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

படத்தின் காப்புரிமை SDF

சிரியாவின் வடக்கு நகரான மன்பிஜ்ஜில் இருந்து இஸ்லாமியவாத நாடு (ஐ.எஸ்.) என்ற அமைப்பின் தீவிரவாதிகள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்தி தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிரியா ஜனநாயகப் படையினரால், வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் நுற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

அந்த வாகனங்கள் ஒவ்வொன்றிலும், பொதுமக்கள் இருந்ததால், அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து மற்றும் அரபுப் துபடையினர் அந்த வாகனங்களைத் தாக்கவில்லை.

படத்தின் காப்புரிமை SDF

துருக்கி எல்லையில் உள்ள வடபகுதி நகருக்கு தீவிரவாதிகள் சென்றதாக நம்பப்படுகிறது.

அமெரிக்க கூட்டுப் படை மற்றும் சிறப்புப் படையின் உதவியுடன், பத்து வாரங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, சிரியா ஜனநாயகப் படையினர் மன்பிஜ் நகரை மீட்டுள்ளனர்.

மன்பிஜ் நகர் கை நழுவிப் போகிறது என்பது உறுதியானதும், சுமார் 100 முதல் 200 பேர் வரையிலான ஐ.எஸ். தீவிரவாதிகள், அவர்களது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் பிணைக்கைதிகளாக பொதுமக்கள் ஆகியோரை ஓரிடத்தில் திரட்டியதாக பாக்தாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் கர்வெர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர், தீவிரவாதிகளுடன் ஒவ்வொரு வாகனத்திலும் பொதுமக்களும் ஏற்றப்பட்டனர். அந்த வாகனங்கள் பின்னர் வடக்கு நோக்கிச் சென்றன. சிரியா ஜனநாயகப் படை போராளிகளும் கூட்டுப் படையினரும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்தனர் என்று அவர் தெரிவித்தார்.

"அவர்களை போரிடாதவர்களாகத்தான் நாங்கள் கருதினோம். அவர்களோ நோக்கிச் சுடவில்லை. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்" என்றார்.

சனிக்கிழமையன்று, நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

இருதரப்புக்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்தபோது, பொதுமக்கள் இழப்பைத் தடுக்கும் வகையில், மன்பிஜ் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற தீவிரவாதிகளுக்கு சிரியா ஜனநாயகப் படை அழைப்பு விடுத்த போதிலும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, தீவிரவாதிகள், நடுவில் பொதுமக்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தால் அதை தங்களது பிரசாரத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சித்தார்கள் என்று கர்னல் கர்வெர் தெரிவித்தார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள், இராக்கிய நகரான ஃபலூஜாவை விட்டு கடந்த ஜூன் மாதம் வெளியேற முயன்றபோது, இராக் மற்றும் கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அதில், 175 வாகனங்கள் நாசமாகிவிட்டன.