பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமைக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை

ஜாமீன் கேட்டு பச்சமுத்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, இன்று சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி பிரகாஷ் முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் பச்சமுத்துவின் ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக பச்சமுத்துவிற்கு ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

அதே சமயம் பச்சமுத்து தரப்பிலான வாதங்கள் முன்வைக்கட்டப்போது, கூறப்படும் மோசடி புகார்கள் அனைத்திலும் உண்மையில்லை என கூறி குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டன.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களாக கூறப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பு மற்றும் மாயமாகியுள்ள வேந்தர் மூவிஸ் மதனின் தாயார் தரப்பு உள்ளிட்டோரும் கூட பச்சமுத்துவின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த வாதங்களை கேட்டறிந்த பின்னர் நீதிபதி பிரகாஷ், இந்த மனுக்கள் மீதான விசாரணையை (நாளை) செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இந்த மனுக்களுடன் நீதிமன்ற காவலில் உள்ள பச்சமுத்துவை 5 நாட்களுக்கு தங்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள, தமிழக காவல்துறை தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட மோசடி புகாரையடுத்து, சென்னையில் கைதாகிய பச்சமுத்துவுக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்து மீது இன்று (திங்கள்கிழமை) நில அபகரிப்பு புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.