மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஏராளமான குடியேறிகள் மீட்பு
கடந்த திங்கள்கிழமையன்று மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 6500 குடியேறிகளை மீட்கும் முயற்சியில் தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களில் குடியேறிகளை காப்பாற்றும் முயற்சிகளில், தனித்தனியான 40 பல தேச மீட்பு பணிகளை உள்ளடக்கிய மீட்பு நடவடிக்கை நடைபெற்ற கடந்த திங்கள்கிழமை மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக அமைந்தது என்று தாங்கள் அனுப்பிய செய்தியில் இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தங்களை மீட்க வந்த மீட்பு கப்பலை அடையும் முயற்சியில், எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் பலரும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது.
மோதல் நடைபெறும் மண்டலங்களான மத்திய கிழக்கு பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து வெளியேறும் அகதிகளுடன் இணைந்து, பல ஆயிரம் ஆப்ரிக்க மக்கள் கடல் பயணத்துக்கு தகுதியில்லாத படகுகளில் லிபிய கடற்கரையிலிருந்து பயணம் செய்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவில் உள்ள பொருளாதார வாய்ப்புக்களை நாடி செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.