ஏவு தளத்தில் வெடித்துச் சிதறிய அமெரிக்க நிறுவன ராக்கெட்

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்னாவ்ரல் பகுதியில் உள்ள ஏவுதளத்தில், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியது.

இந்த வெடிப்பில் காயமடைந்தவர்கள் குறித்த எவ்வித தெளிவான தகவலும் இன்னும் கிடைக்கவில்லை.

வரும் சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய செயற்கைகோள் ஒன்றை ஏவ திட்டமிட்டிருந்த நிலையில், சோதனை அடிப்படையில் ஆளில்லா ராக்கெட் ஒன்றை ஏவியபோது அது வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

ராக்கெட் ஏவப்பட்ட இடத்திலிருந்து பெரும் புகை கிளம்பியதாகவும், அதிர்ச்சி அலை ஒன்றை உணர்ந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ஃபால்கன் 9 என்ற அந்த ராக்கெட், கடலுக்கு மத்தியில் உள்ள மிதக்கும் மேடையில் தரையிறங்கும் திறன் கொண்டது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் கலனை அனுப்பவும் இது பயன்படுத்தப்படுகிறது.