`நிரந்தர புனிதராகும் அன்னை தெரஸாவை சந்தித்த நிமிடங்கள்'

இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் 19 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த அன்னை தெரஸா, செப்டம்பர் 4 ஆம் நாள் வத்திக்கானில் நடைபெறுகின்ற பிரமாண்ட திருவழிபாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதராக அறிவிக்கப்படுகிறார்.
ஐம்பது ஆண்டுகள் ரோம் நகரில் பிபிசியின் செய்தியாளராகப் பணியாற்றியவர் டேவிட் வில்லே. ரோமின் ஃபியுமுசினோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் அன்னை தெரஸாவை சந்தித்து உரையாடிய நினைவுகளை, உணர்வுகளாகப் பதிவு செய்கிறார்.
கொல்கத்தாவின் “குப்பத்து மக்களின் புனிதர்” என்று அறியப்பட்ட அன்னை தெரஸா மிகவும் அடக்கமான, எளிமையான, நவீன கால பன்னாட்டுப் பயணி என்பதை அவரைப் பார்த்தவுடனே அறிந்து கொள்ள முடிந்தது.
ஏழைகளுக்கு பணியாற்ற 1950 ஆம் ஆண்டு நிறுவிய அன்பின் மறைபரப்பு கன்னியர்கள் சபையின் உறுப்பினர்களை சந்திக்கும் வகையில் அடிக்கடி உலக நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்பவராக விளங்கினார் தெரஸா.
அதனால், ரோமின் பொது விளையாட்டு அரங்கான கோலிசியத்திற்கு அருகில் இருக்கும் அவர் நிறுவிய சபையின் தலைமையகத்திலோ அல்லது இந்தியாவிலுள்ள நல்வாழ்வு மையத்திலோ அல்லாமல் பரபரப்பான விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது.
நாங்கள் ஒன்றாக, விருந்தினர் வரவேற்பு பிரிவில் அமர்ந்தவுடன், வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறப்பதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் வழங்கியிருந்த பயண அனுமதியை அவர் பெருமையோடு காட்டி மகிழ்ந்தார்.
நான் அவரிடம் ஒரு நேர்முகம் காண விரும்பி நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன். ஆனால் கன்னியர்கள் அதனை தள்ளிப்போட்டு வந்தனர்.
இறுதியில், இந்தியாவில் இருந்து ரோம் வருகின்ற அன்னை தெரசா, கனடாவுக்கு செல்வதற்கு முன்னால் ஒரு மணிநேரம் ரோம் விமான நிலையத்தில் இருப்பார். அப்போது சந்தித்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்தனர்.
இவ்வாறு அவரிடம் சிறியதொரு உரையாடலை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவர் மிகவும் சிறிய உருவம் கொண்டவராகக் காணப்பட்டார். அவருடைய முகத்தில் தோல் சுருங்கி காணப்பட்டது.
தன்னுடைய மறைபரப்பு கன்னியர்களுக்கு சீருடையாக தேர்ந்தெடுத்த நீலக் கரையுடன் கூடிய வெள்ளைச் சேலையில் முக்காடு இட்டவராக கையில் வெள்ளை துணிப் பையோடு வந்த அவரை எளிதாக இனம்கண்டு கொள்ள முடிந்தது.
“நீங்கள் இன்னொரு விமானத்தை பிடிக்க வேண்டியிருப்பதால், உங்களுடைய பயணப் பெட்டிகளை எடுத்துகொள்ளவா?” என வாழும் புனிதர் தன்னுடைய பயணப் பெட்டியை தொலைத்து விடலாமே என்று எண்ணி கேட்டேன்.
பின்னர்தான் அது முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தேன்.
“இல்லை. என்னுடைய எல்லா உலக உடமைகளையும் இந்த சிறிய பையில் தான் உலகெங்கும் சுமந்து செல்கிறேன். எனக்கு தேவையானவை மிகவும் குறைவான பொருட்களே” என்று அவர் பதிலளித்தார்.
“எவ்வாறு அனைத்தையும் முன்னரே திட்டமிடுகிறீர்கள்? என்று செல்பேசிகளுக்கு முந்தைய காலமான அப்போது நான் கேட்டேன்.
“நான் ரோமில் இருந்தால், வழக்கமாக விமான நிலையத்தில் இருக்கும் காசு போட்டு பேசுகின்ற தொலைபேசி அழைப்பு சேவையை பயன்படுத்தி நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் அல்லது போப் இரண்டாம் ஜான் பால் என யாரவது ஒருவரை அழைத்து பேசுவேன். அவர்கள் ஒரு காரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
நான் 1980-களில் அன்னை தெரசாவை சந்தித்த அப்போது, அவர் தொடங்கிய அன்பின் மறைமரப்பு கன்னியர்கள் மற்றும் சகோதரர்கள் மற்றும் பாதிரியார்கள் என அவர்கள் வளர்ந்து பன்னாட்டு குடும்பமாக 1,800 கன்னியர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான பொதுநிலை பணியாளர்களைக் கொண்டு வளர்ந்திருந்தனர்.
இப்போது அவர்கள் மொத்தம் 6 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளனர். 139 நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அவருடைய சபைக்கு பன்னாட்டு எல்லைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு, பெர்லின் சுவர் இடிபடுவதற்கு முன்னரே, சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே இல்லங்களையும், நல்வாழ்வு மையங்களையும் உருவாக்கிய அவர், கிழக்கு ஐரோப்பாவில் தன்னுடைய சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் தொடங்கிவிட்டார்.
1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அவர் இரண்டு மையங்களை ஹாங்காங்கில் தொடங்கிவிட்டார். ஆனால், ஏழைகளுக்கு இந்த சபையினர் செய்கின்ற பணிகளை சீனா இதுவரை எதிர்த்தே வருகிறது.
சந்திப்பின் நிமிடங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன.
நோயுற்றோர், இறக்கும் தருவாயில் இருப்போர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என அனைவருக்கும் ஒருமனப்படுத்தி பணியாற்றுவது பற்றி அன்னை தெரசா எனக்கு விளக்கினார்.
அவருடைய சொற்களில் கூறுவதாக இருந்தால், “பசித்தோருக்கு, ஆடையின்றி இருப்போருக்கு, வீடிழந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, பார்வையற்றோருக்கு, தொழுநோயாளிகளுக்கு, விரும்பத்தகாதவர்களுக்கு, அன்பு கிடைக்காதவர்களுக்கு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு, சுமையென கருதப்படுகிறவர்களுக்கு மற்றும் அனைவராலும் தவிர்க்கப்படுவோர்களுக்கு எமது பணி தொடரும்” என்றார்.
1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போப் இரண்டாம் ஜான் பால் கொல்கத்தாவிலுள்ள நல்வாழ்வு மையத்தில் அன்னை தெரஸாவை சந்தித்து, இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.
அன்னை தெரசா இறக்கும்வரை வத்திகானில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் போப்பின் பக்கத்தில் வீற்றிருப்பவராக அடிக்கடி தோன்றினார்.
பின்னர் 2003 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் தான், மறைந்த அன்னை தெரசாவுக்கு “அருளாளர்“ பட்டமளித்து புனிதர் பட்டம் பெறுவதற்கான வழிமுறையை தொடங்கி வைத்தார்.
டோரொன்டோ செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டவுடன், பிரியாவிடை பெறும் அறை வரை இருவரும் இணைந்து சென்றோம்.
விமானத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஆர்வமாகச் செல்லும் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் அதிகம் கவனிக்கப்படாதவராக, தானியங்கி கதவுகளுக்கு அப்பால் அவர் மறைந்து போனார்.
வாழும் புனிதர் ஒருவரைச் சந்தித்த அந்த உணர்வுகளை நான் முழுமையாக உணர்ந்தேன்; அவர் என் உள்ளத்தைத் தொட்டுவிட்டார்; அவருடைய வாழ்வின் மகிழ்ச்சியை எனக்குப் பரிமாறிவிட்டார்; அவர் என்னை புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டார் என்று கூறுவேன்.