குடியேறிகள் ஆதரவு கொள்கையால் மெர்கலுக்கு பின்னடைவு

படத்தின் காப்புரிமை AFP

அகதிகள் பற்றிய கொள்கைகள்தான் மெக்லென்பர்க் மேற்கு போமெரானியா மாநில வாக்காளர்களால் சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி நிராகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று அக்கட்சியின் தலைமை செயலாளர் ஜெர்மனியில் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி இந்த வாக்கெடுப்பில் மூன்றாவது இடத்தையே பெற முடிந்தது.

கடந்த ஆண்டு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான குடியேறிகளை வரவேற்றது பரப்புரையின்போது முக்கிய பிரச்சனையாக இருந்தது என்று கட்சியின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த வாக்கெடுப்பில் அதிகமாக பயனடைந்திருக்கும் ஜெர்மனிக்கான மாற்று கட்சி எனப்படும் குடியேறிகளுக்கு எதிரான ஏஎஃப்டி கட்சியின் தலைவர், இந்த வாக்கெடுப்பு ஏங்கெலா மெர்கலுக்கு மரண அடி என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரவிருக்கும் பெர்லின் தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியின் தோல்விகள் தொடருமானால், மெர்கலின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.