மலேசியாவுக்கான இலங்கை தூதர் தாக்கப்பட்டது தொடர்பாக 5 சந்தேக நபர்கள் கைது

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராஹிம் அன்சார், ஞாயிற்றுகிழமையன்று தாக்கப்பட்டது தொடர்பாக, 5 சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக மலேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை

ஓர் அமைச்சருடன், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை விட்டு இப்ராஹிம் அன்சார் வெளியேறிய போது, அங்கு தமிழில் கோஷமிட்டவாறு வந்த ஒரு குழுவால் தாக்கப்பட்டார்.

மலேசியாவுக்கு நாடாளுமன்ற குழுவொன்றுடன் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மலேசியா வந்துள்ள இச்சமயத்தில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சில தமிழ் ஆதரவு குழுக்கள், மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கோலாலம்பூரில் இலங்கையை சேர்ந்த ஒரு புத்த மத துறவி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தூதர் மீது நடந்த தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

இப்ராஹிம் அன்சரை தாக்கியவர்கள் , 'ராஜபக்ஷ', 'இலங்கை தூதர்' ஆகியவர்கள் குறித்து கோஷமிட்டது தெளிவாக கேட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்காக, இப்ராஹிம் அன்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மலேசிய தமிழர்கள் என்று பிபிசி சிங்கள சேவையிடம், மலேசிய போலீஸ் துறையை சேர்ந்த ஒரு ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களில் யாரும் இலங்கையை சேர்ந்தவர்களோ, இந்தியர்களோ இல்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும், அதனால் தாங்கள் சினம் அடைந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, மலேசிய போலீசின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ராணுவ ரீதியாக இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மலேசிய தமிழர்கள் சிலர் மத்தியில் பலத்த ஆதரவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று கோலாலம்பூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மலேசிய போலீஸ் தலைவர், மலேசியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்