இலங்கை: தயா மாஸ்டர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த வேலாயுதம் தயா மாஸ்டருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்ட வலுவற்றது என அவர் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ,சுமந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Image caption சட்டத்தரணி எம்.ஏ,சுமந்திரன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2006-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட விதிகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளார் என குற்றம் சுமத்தி தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

இரண்டாவது தடவையாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அந்த வழக்கு தொடர்பான கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், அவைகள் இன்னும் திரும்பி வராத காரணத்தினால் இந்த வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இந்த வழக்கை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து கருத்து வெளியிட்ட சட்டத்தரணி சுமந்திரன், மனித உரிமைகளையும் சாதாரண நீதி முறைகளுக்கு முரணான வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பிலான விதிமுறைகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாடடு சட்ட வலுவற்றது என சட்ட ரீதியான ஆட்சேபணை தெரிவித்து வாதிடுவதற்காகவே இந்த வழக்கில் முன்னிலையாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த விதிகள் கொண்டு வரப்பட்டபோது அவற்றை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கோரியிருந்தன. அதனால் அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என முந்தைய அரசு உறுதியளித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்ட வலுவற்றது என்ற தனது ஆட்சேபணையைப் பதிவு செய்யப் போவதாக நீதிமன்றத்தில் முன்னறிவித்தல் கொடுத்திருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.