சிரியா உள்நாட்டுப் போரினை முடிவுக்கு கொண்டு வர லண்டனில் முக்கிய ஆலோசனை கூட்டம்

சிரியாவின் பிரதான எதிர்க்கட்சி குழுக்களின் பிரதிநிதிகள், அந்நாட்டில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரினை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரலாம் என்று தங்களின் ஆலோசனைகள் அடங்கிய மிக விரிவான திட்டங்களை வடிவமைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை
Image caption உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியா ( கோப்புப் படம்)

லண்டனில், சௌதி அரேபியா ஆதரவுடன் நடைபெறும் இந்த சந்திப்பில், அமைதியான அதிகார பகிர்வினை எவ்வாறு கொண்டு வருவது என்று உயர்நிலை ஆலோசனைக் குழு விவாதிக்கிறது.

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்துடன் 6 மாதங்கள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்துள்ள இந்த உயர்நிலை பேச்சுவார்த்தைக் குழு, அதனுடன் இணைந்து முழு போர் நிறுத்தம் என்ற ஆலோசனையையும் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption சிரியா அதிபர் பஷார் அல் அசாத்

பஷார் அல் அசாத்தும், ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அசாத்தின் கூட்டாளிகளும் அமைதி உடன்படிக்கை குறித்து எவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பதைப் பரிசோதிக்கும் வகையில் தாங்கள் அளிக்கும் திட்டங்கள் அமையும் என சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வித அரசியல் தீர்வும் எட்டப்படவில்லையென்றால், ராணுவ நடவடிக்கை உள்பட மாற்றுத் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்