http://www.worldservice.com/tamil

09 ஆகஸ்ட், 2004 - பிரசுர நேரம் 15:45 ஜிஎம்டி

கிரிக்கெட்டின் கதை

இன்று பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விறுவிறுப்புமிக்க கிரிக்கெட் விளையாட்டு தோன்றிய விதம், அதன் வளர்ச்சி, பல்வேறு நாடுகளின் அது பரவிய விதம், மறக்க முடியாத ஆட்டங்கள் குறித்த சிறப்பு தொடர்.

இங்கிலாந்தில் ஆடு மேய்ப்பவர்களால் முதல் முதலில் விளையாடப்பட்ட ஆட்டம் கிரிக்கெட் என்பது பற்றிய சரித்திர தகவல்கள், கிராமப்புற பொழுதுபோக்காக இருந்த ஆட்டம் மேட்டுக்குடிக்கும் பரவியது, கிரிக்கெட்டின் முதலாம் கதாநாயகனாக W.G.கிரேஸ் உருவெடுத்தது போன்ற சுவாரஸ்ய தகவல்களை முதல் பாகத்தில் கேளுங்கள்.


கிரிக்கெட் தோன்றிய நாடான இங்கிலாந்து அந்த ஆட்டத்திற்கும் அதன் விதிமுறைகளுக்கும் செய்த பங்களிப்பு, இங்கிலாந்து ஆதிபத்திய அரசாக இருந்த சமயத்தில் கிரிக்கெட் விளையாட்டு இந்தியா, மேற்கிந்திய தீவுகள் போன்ற அதன் காலணீய நாடுகளில் பரவிய விதம் ஆகியவற்றை விவரிக்கிறது இரண்டாம் பாகம்.


இந்த பாகத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாறு, அஷஸ் கோப்பைக்காக நடந்த போட்டாபோட்டி, பாடி லைன் பந்துவீச்சு ஏற்படுத்திய சர்ச்சை, கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் ப்ராட் மேனின் சாதனைகள், உலகின் முதல் ஒரு-நாள் போட்டித்தொடர் ஏற்படுத்திய பரபரப்பு ஆகியவற்றை கேட்கலாம்.


ஆஸ்திரேலிய செல்வந்தர் கெர்ரி பேக்கர் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துடன் தகராறு ஏற்பட்ட பிறகு ஒரு-நாள் உலகப் போட்டித்தொடரைத் தொடங்கியது, நியுசிலாந்தில் கிரிக்கெட் தோன்றி வளர்ந்த விதம், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராகவும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தப் பந்துவீச்சாளராகவும் ரிச்சர்ட் ஹேட்லி உருவெடுத்தது ஆகியவற்றை நான்காம் பாகத்தில் கேட்கலாம்.


ஆப்பிரிக்க கண்டத்தில் கிரிக்கெட் வளர்ச்சியடைந்துவரும் பாஙகு, தென்னாப்பிரிக்க வெள்ளையினத்தவரால் மட்டும் விளையாடப்பட்ட இந்த ஆட்டம் இப்போது பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இனத்தவராலும் விளையாடப்பட்டு வருவது ஆகியவை குறித்தது இந்தப் பாகம்.


இந்தப் பாகத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக வலுவான கிரிக்கெட் விளையாடும் நாடாக ஜிம்பாப்வே திகழ்வது, கென்யாவில் கிரிக்கெட் துரித வளர்ச்சி அடைந்து வருவது குறித்துக் கேட்கலாம்.


உலகின் வேறு எந்தப் பகுதியையும் விடக் கூடுதலாக மேற்கிந்தியத் தீவுகளின் சமூக வரலாற்றில் கிரிக்கெட் பின்னிப் பிணைந்திருக்கும் விதம், சிறிய மக்கட் தொகையைப் பெற்ற இந்தக் குட்டித் தீவுகளில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் எவ்வாறு உருவெடுத்தார்கள் என்பதை விளக்குகிறது இந்த ஏழாம் பாகம்.


க்ளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றது, அவர் தலைமையேற்ற 15 ஆண்டு காலகட்டத்தில் இருபத்து ஒன்பது டெஸ்ட் தொடர்களை மேற்கிந்திய அணி தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்தது ஆகியவற்றை எட்டாம் பாகத்தில் கேட்கலாம்.


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளில் கிரிக்கெட் தோன்றி வளர்ந்த விதம், இந்த விளையாட்டுக்கு அங்கிருக்கும் தீவிரமான ஆதரவு குறித்து தகவல்களையும் கருத்துகளையும் தருகிறது இந்தப் பாகம்.


இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஆட்டம் எவ்வாறு முதன்மை ஆட்டமாக பிரபலமடைந்தது என்பது பற்றியும், இந்த இருநாடுகளுக்கிடையிலான போட்டிகள் எவ்வாறு உலக கவனத்தை ஈர்க்கத் துவங்கின என்பது பற்றியும், அரசியல் காரணங்களால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டிகள் பல ஆண்டுகள் தடைபட்டு மீண்டும் துவங்கியது குறித்தும் நேயர்கள் பத்தாம் பாகத்தில் கேட்கலாம்.


1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் அப்போதைய நடப்புச் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது எவ்வாறு இந்தியக் கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியமைத்தது என்பது குறித்து தகவல்களும் கருத்துகளும் இந்தப் பாகத்தில் இடம்பெறுகின்றன.


பாகிஸ்தானும் இலங்கையும் உலகக் கோப்பைப் போட்டிகளை வென்ற விதம், வங்கதேச அணிக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்த சர்ச்சை கருத்து வேற்றுமைகள் குறித்து இந்த இறுதிப் பாகம் அலசுகிறது.