http://www.worldservice.com/tamil

20 அக்டோபர், 2004 - பிரசுர நேரம் 13:58 ஜிஎம்டி

வீரப்பன் மரணம் - விவரமும் விவாதமும்

தமிழகம் மற்றும் கர்நாடக காட்டுப் பகுதிகளில் பல காலம் தலைமறைவாய்த் திரிந்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனும், மூன்று கூட்டாளிகளும், கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி திங்கள் இரவு, தமிழக விசேட அதிரடிப் படையினரால் தர்மபுரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலிசார்
தெரிவித்தார்கள்.

தாங்கள் விரித்த வலையில் வீரப்பன் சிக்கியது எப்படி என்பது பற்றி, இந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய போலிஸ் அதிகாரி விஜயகுமார்
தர்மபுரி, சென்னை மற்றும் பெங்களூரில் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.

வீரப்பன் உள்ளிட்ட கொல்லப்பட்ட நான்கு பேரின் சடலங்களும் தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்களில் சிலர் அதிரடிப் படையினர் வீரப்பனை சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது, சிறைப்பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்றும் கோபத்தோடு கூறினர்

இதுதொடர்பாக தர்மபுரி சென்றிருந்த பி பி சியின் சம்பத்குமார் தயாரித்து வழங்கிய பெட்டக நிகழ்ச்சி.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுவது போலத் தெரிகிறது, வீரப்பனோடு மூன்று பேரே இருந்த நிலையில் போலீசார் வீரப்பனை உயிரோடு பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ஹென்றி டிஃபேன்.

வீரப்பனில் மரணத்தின் மூலம், வீரப்பனால் பயன் பெற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள் பற்றிய விபரங்கள் வெளிவர வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றும் ஹென்றி டிஃபேன் கூறினார்.

தமிழகப் போலீசாரின் மிகப் பெரிய சாதனை இது, பல ஆண்டு கால கடுமையான உழைப்பின் அடிப்படையில் கிடைத்த வெற்றி என்றிறார் தமிழகக் காவல் துறையின் முன்னாள் தலைவரும், அதிரடிப் படைக்குத் தலைமை வகித்தவருமான வால்டர் தேவாரம். மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டினை நிராகரித்த தேவாரம், வீரப்பனும் அவரது குழுவினரும் ஆயுதங்களோடு இருக்கையில் உயிரோடு பிடிப்பது கடினம் என்கிறார்.

வீரப்பன் மரணம் பற்றி, அக்டோபர் 24-25 தேதிகளில், ஆந்திரப் பிரதேச சிவில் உரிமை குழுவின் தலைவர் சேஷய்யா தலைமையில் இருபது பேர் கொண்ட ஒரு மனித உரிமைக் குழு தர்மபுரி மாவட்டம் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது, வீரப்பன் மரணம் பற்றி பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டும் என்கிறார், இக் குழுவில் பங்கு பெற்ற மனித உரிமை ஆர்வலர் ஜி சுகுமாரன் கூறுகிறார்.

வீரப்பனை சுட்டுக்கொன்ற பின் அதற்கு நேர்த்திக் கடனாக பன்னாரி அம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொண்ட தமிழக விசேட அதிரடிப் படைத் தலைவர் விஜயகுமார் அடுத்ததாக மேற்கொள்ள இருக்கும் நடை பயணம் சரியானது அல்ல என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் நல்லக்கண்ணு.

வீரப்பன் நூற்றுக்கணக்கான விலங்குகளைக் கொன்றதாகக் கூறப்படும் நிலையிலும், பல கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்படும் நிலையிலும், வீரப்ப்பனின் மரணத்திற்குப் பின் சாமானிய மக்களில் பலர் அவரை ஒரு கதாநாயகன் போல எண்ணுவதன் காரணத்தின் பின்ணணியை விளக்குகிறார் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக இருக்கும் முத்தையா.