http://www.worldservice.com/tamil

27 அக்டோபர், 2005 - பிரசுர நேரம் 13:59 ஜிஎம்டி

காஞ்சி மடம் சர்ச்சையில்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஆச்சாரியார்கள் ஜயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீது கொலைக் குற்றம் உள்ளிட்டு பல்வேறு குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருவது தொடர்பான பற்றிய தகவல்களும் கருத்துகளும்...

தேதி: 26/10/2005- செய்தி: காஞ்சி மடாதிபதி ஜயேந்திரர் மற்றும் பிறர் மீது குற்றம்சாட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு.

தேதி: 14/01/2005- செய்தி: காஞ்சி மடத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தேதி: 14/01/2005- செய்தி: காஞ்சி மடாதிபதிக்கு கிடைத்துள்ள ஜாமீனை ரத்து செய்ய கோருவோம்: பிரேம்குமார்

தேதி: 10/01/2005- செய்தி: காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது

தேதி: 10/01/2005- செய்தி: சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரருக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஜாமீன்

சங்கராச்சாரியார் கைது தொடர்பில் தமிழ் ஊடகங்களின் நிலைப்பாடு- ஒரு ஆய்வு

ஜயேந்திரருக்கு எதிரான விசாரணைகளில் மனித உரிமை மீறல்கள் இல்லை: காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார்

காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் தன் மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்

காஞ்சி மடாதிபதி கைது விவகாரம்- பாஜக நிலைப்பாட்டில் முரண்பாடு இல்லை என்கிறார் இல.கணேசன்

ஜெயேந்திரர் கைதில் மனித உரிமை மீறல் ஏதும் இல்லை என்கிறார் மனித உரிமையாளர் ஹென்றி-- சிறையில் சாதிப்பாகுபாட்டை சாடுகிறார்

'பத்திரிகைகள் மடத்தின் விளம்பரத்தை வெளியிட்டது தவறு அல்ல'- தினமலர் நாளேட்டின் பதிப்பாளர் ஆர்.லட்சுமிபதி

'சங்கராச்சாரியார் கைது மடத்தின் மீதான ஒரு பழிவேட்டை அல்ல' - முன்னாள் தமிழக பொலிஸ் தலைவர் வி.வைகுந்த்

சிறையில் ஜெயேந்திரர் நலமுடனே இருக்கிறார்: காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர்

ஜெயேந்திரர் கைதுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ள பிராமண சங்கத்தின் தலைவர் நாராயணன் செவ்வி

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீதான கொலைவழக்கை ஊடகங்களே வழக்காட முடியுமா? - முன்னாள் தினமணி ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் கருத்து

ஜெயேந்திரரின் வாக்குமூலம் பற்றிய பத்திரிகைச் செய்திகள் பொய் என்கிறார் மடாதிபதியின் வழக்கறிஞர் தியாகராஜன்

ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் ஆர்.வெங்கட்ராமன் நிலைப்பாடு குறித்து இரா.செழியனின் கருத்து

மடங்கள் சாதி ரீதியான அமைப்புகளே என்கிறார் மதங்களையும் மடங்களையும் ஆராய்ந்துவரும் டாக்டர். தொ.பரமசிவம்

ஜெயேந்திரர் வழக்கில், முறையான விசாரணை நடக்குமா? தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கேள்வி

காஞ்சி மடக் கணக்குகளை அரசு ஆராய்வதாகத் தோன்றவில்லை என்கிறார் முன்னாள் அமைச்சர் இராம வீரப்பன்

மடத்தை அரசு எடுக்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது என்கிறார் சோ ராமஸ்வாமி

ஜெயேந்திரர் கைது ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அல்ல என்கிறார் 'இந்து' ஆசிரியர் ராம்

வி.ஹெச்.பி. கடும் எதிர்ப்பு - வேதாந்தம் செவ்வி

ஜெயேந்திரர் கைது - தகவல்களும், மக்கள் கருத்துகளும்

கைது குறித்து பிரமுகர்கள் அபிப்பிராயம்

போலீஸ் தரப்பு வாதம் பற்றிய செய்திக் குறிப்பு

கைது விவகாரம் படங்களில்

28/10/05

ஜயேந்திரர் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு

செய்தியும செவ்விகளும்...

காஞ்சி மடாதிபதி ஜயேந்திரர் மற்றும் பிறர் மீதான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தமிழக நீதிமன்றத்திலிருந்து பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஞ்சி மடாதிபதி ஜயேந்திரர் மற்றும் பிறர் மீதான தமிழக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவே இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என ஜயேந்திரர் தரப்பு இந்திய உச்சநீதிமன்றதில் மனு தொடுத்திருந்தது.

ஜயேந்திரர் கொலை வழக்கு தமிழக நீதிமன்றத்தில் முறையாக நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்ற வாதத்தை இந்திய உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

ஆனால் ஜயேந்திரர் தரப்பு கோரியபடி ஆந்திர மாநிலத்துக்கு இந்த வழக்கை மாற்றினால் எல்லா ஆவணங்களையும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும் அது வழக்கை இழுத்தடிக்கும் என்று கருதிய உச்சநீதிமன்றம், தமிழிலேயே வழக்கு விசாரணைகள் நடக்கும் பாண்டிச்சேரிக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சிகளில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசக்கூடியவர்கள் என்பதால் பாண்டிச்சேரிக்கு மாற்றினால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர் கருத்து

உச்ச நதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சங்கர்ராமன் கொலை வழக்குக்காக அரசு தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு வழக்கறிஞர் பாலசுந்தரம் தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், திருப்தியளிக்கும் தீர்ப்பு என்பதைவிட இதனை பாதகமற்ற தீர்ப்பு என்று வர்ணித்தார்.

வேறு மொழி பேசும் மாநிலங்களுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருந்தால், அனைத்து ஆவணங்களையும் வேறு மொழியில் மொழிபெயர்க்க நீண்ட காலமாகியிருக்கும். ஆனால் பாண்டிச்சேரியிலும் தமிழ் மொழியிலேயே நீதிமன்றங்கள் நடைபெறுவதால்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் கால தாமதம் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசு நீதித் துறையில் தலையிடுகிறது என்பதை சங்கர மட வழக்கறிஞர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்காமல், பல தேவையில்லாத சின்ன காரணங்களையெல்லாம் முன்வைத்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.

ஜயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கருத்து

சங்கரராமன் கொலை வழக்கை, தமிழகத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு மாற்றி இந்திய உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார், காஞ்சி சங்கராச்சாரியார் சார்பில் வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான கே.எஸ்.தினகரன்.

தமிழகத்தில், அரசு இயந்திரம், சங்கராச்சாரியாருக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதால், அங்கே விசாரணை நடந்தால் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்காது என்று தாங்கள் கூறிய கருத்துக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுகொண்டதால், இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அவர் தெரிவித்தார்.

அதேசமயம், பாண்டிச்சேரி என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதால், அங்கே மாற்றலாம் என்று தமிழக அரசு தெரிவித்த யோசனையை ஏற்கவேண்டாம் என்று தாங்கள் கூறிய வாதத்தை உச்சநீதிமன்றம், என்ன காரணத்தால் ஏற்கவில்லை என்று தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பிறகே தெரியவரும் என்பதால், அதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப தேவைப்பட்டால் தங்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்றைய தீர்ப்புக்கு எதிராக மறுபரிசீலனை மனு தாக்கல்செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலே செல்க

14/01/05

காஞ்சி சங்கர மடத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சம்பத்குமார் வழங்கிய செய்தி

காஞ்சிபுரம் சங்கரமடத்திற்குச் சொந்தமான 183 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மடத்தின் நிர்வாகத்திற்கும், மடத்தால் நடத்தப்படுகின்ற அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதென்றும் சங்கர மடத்தின் வழக்கறிஞரான சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மடத்தின் நிர்வாகம் வழங்கிய காசோலைகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக சில வங்கி மேலாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலே செல்க

14/01/05

காஞ்சி மடாதிபதிக்கு கிடைத்துள்ள ஜாமீனை ரத்து செய்ய கோருவோம்: பிரேம்குமார்

பிரேம்குமார் செவ்வி

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்ற வாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அவரது தரப்பில் தவறான வங்கிக் கணக்கு விபரங்கள் தரப்பட்டது என இப்போது தெரிய வந்துள்ளதாக வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி பிரேம்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தவறான தகவல்களைத் தந்து ஜாமீன் கோரப்பட்டது, இதனைத் தொடர்ந்து நீதி மன்றம் ஜெயேந்திர சரஸ்வதிக்கு ஜாமீனை வழங்கியது, எனவே இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திங்கட்கிழமையன்று நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக்வும் பிரேம்குமார் தெரிவித்தார்.

மேலும் காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன், சின்னா உட்பட எட்டு பேரும் குண்டர் தடை சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்த பிரேம்குமார், ஆனால் ஜெயேந்திரர் மீதும் குண்டர் தடை சட்டம் பாயாது என்றும் தெரிவித்தார்.

இதே போல, கொலை தொடர்பாக ஜெயேந்திரர் பொலிசாரிடம் தந்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோ காட்சி எவ்வாறு தனியார் தொலைக்காட்சியொன்றில் காண்பிக்கப்பட்டது என்று கேட்டதற்கு, அப்படி காண்பிக்கப்பட்டது வாக்குமூலத்தின் போது எடுக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்ய பிரேம்குமார், இது எப்படி தனியார் தொலைக்காட்சிக்கு சென்றது என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

மேலே செல்க

10/01/2005

காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது

காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி திங்கட்கிழமை மாலை மடத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக சிறையில் இருந்து வரும் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு இந்திய உச்ச நீதி மன்றம் இன்று காலை நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிற்கு விஜயேந்திரரின் கைது நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் விஜயேந்திரர் கைது செய்யப்பட்ட காரணங்கள் குறித்து பேசுகிறார்

இது திடீர் கைது அல்ல, பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் இவரைக்கைது செய்வது என்ற முடிவை ஏற்கனவே எடுத்து அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தும் இருந்தோம், இந்த வழக்கின் மொத்தக் குற்றப்பத்திரிக்கையை எதிர்வரும் இருபதாம் தேதிக்குள் தாக்கல் செய்வோம் என்றார், இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டுவரும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார்.

மேலே செல்க

சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரருக்கு ஜாமீன்

கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக சிறையில் இருந்து வரும் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு இந்திய உச்ச நீதி மன்றம் இன்று காலை நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிற்கு விஜயேந்திரரின் கைது நிகழ்ந்துள்ளது.

ஜெயேந்திரருக்குப் பிணை கிடைத்திருப்பதை அடுத்து அவர் ஓரிரு நாட்களில் அவர் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. காஞ்சி மடத்துக்கு ஜெயேந்திரர் செல்லக்கூடாது, அவருடைய கடவுச்சீட்டை கையளிக்கவேண்டும் என்ற இரு நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி தில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கிய தகவல்கள்

அதே நேரம் வெளியிலிருந்து கொண்டு மடத்தின் ஆன்மிக நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கலாமா, கூடாதா என்பது பற்றி நீதிமன்றம் ஏதும் குறிப்பிடவில்லை என்கிறார் தினமணி இதழின் டில்லி செய்தியாளர் தங்கவேல்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திர சரஸ்வதியின் சகோதரர் ரகு உட்பட பலர் சிறையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே செல்க

19 டிசம்பர் 2004

சங்கராச்சாரியார் கைது தொடர்பில் தமிழ் ஊடகங்களின் நிலைப்பாடு- ஒரு ஆய்வு

ஊடக நிலைப்பாடு குறித்து சம்பத்குமார் ஆய்வு

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி கைது மற்றும் காஞ்சி மடத்திலும், அதன் சார்பு நிலையங்களிலும் நடைபெற்றதாக பொலிசாரால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், இந்திய ஊடகங்களில், குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணைய தளங்களிலும் பரபரப்பாக வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால், முன்னெப்பொழுதையும் விட இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் எடுத்துள்ள நிலைப்பாடு இப்பொழுது விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது.

உதாரணமாக, பிராமண சமூகத்தோரால் நடத்தப்படும் அல்லது நிர்வகிக்கப்படும் பத்திரிகைகள், ஜெயேந்திரர் கைதினை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சிப்பதாக சில பத்திரிகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நக்கீரன், குமுதம், தினகரன், சன் தொலைக்காட்சி போன்றவை பொலிசார் கசிய விடும் செய்திகளை வெளியிட்டு காஞ்சி மடத்தின் மீது களங்கம் கற்பிப்பதாக காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களும், சில பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் தமிழ் ஊடகங்களின் நிலை குறித்த கண்ணோட்டம், வழங்குகிறார் எமது தென்னக நிருபர் சம்பத்குமார்.

மேலே செல்க

17 டிசம்பர் 2004

ஜயேந்திரருக்கு எதிரான விசாரணைகளில் மனித உரிமை மீறல்கள் இல்லை: காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார்

பிரேம்குமார் செவ்வி

சாட்சிகள் அனைவரும் வெளிப்படையான ஒரு இடத்தில் விசாரிக்கப்படுவதாகவும், விசாரணை ஒலிவடிவிலும் ஒளிவடிவிலும் பதிவுசெய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உரிமை மீறல் இருப்பதாகக் கருதும் சாட்சிகள் மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகளிடம் முறையிடலாம் என்றும் அவர் கூறினார்.

சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான அப்புவையும் ரவிசுப்பிரமணியத்தையும் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மும்முரமாக நடந்துவருவதாக தெரிவித்த காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் அவர்களைக் கைது செய்வதற்கான அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

பெண் தொடர்பு போன்ற விஷயங்களால் சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணையின் கவனம் திசை திரும்பாது என்று கூறினார்.

கொலை வழக்கிற்கு தேவையான தகவல்களை பெண் சாட்சியங்களிடம் இருந்து பெறுவதற்காக மட்டுமே அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என்றும் மடத்திற்கு இருந்த பெண் தொடர்புகள் குறித்து தாங்கள் விசாரணை செய்யவில்லை என்றும் பிரேம்குமார் குறிப்பிட்டார்.

இன்னும் ஓரிரண்டு வாரத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாங்கள் எண்ணியுள்ளதாக அவர் கூறினார்.

மேலே செல்க

10 டிசம்பர் 2004

சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் பிரேம்குமார்

பிரேம்குமார் செவ்வி

கன்னியாகுமரி பாதிரியார் ஜோண் ஜோசப் வழக்கு தொடர்பில் அவர் மீது சித்திரவதை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அவர் மீதான நீதிமன்ற கண்டனக் கருத்துகள் குறித்து அவர் இங்கு விளக்கம் தருகின்றார்.

மேலே செல்க

காஞ்சி மடாதிபதி கைது விவகாரம்- பாஜக நிலைப்பாட்டில் முரண்பாடு இல்லை என்கிறார் இல.கணேசன்

இல.கணேசன் செவ்வி

இந்த வழக்கை விசாரிக்கும் மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரியான பிரேம் குமாரை தாங்கள் முன்னர் விமர்சிக்காமல், இப்போது விமர்சிப்பதற்கு காரணம், இப்போதுதான் அவரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்துள்ளதுதான் என்றார்.

ஜெயலலிதா இவ்வழக்கைக் கையாளும் முறை பற்றி பாஜகவினர் இப்போது கூர்மையாக விமர்சிக்காமல் இருப்பது அவரோடு பின்னர் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலா என்று கேட்டதற்கு, பாஜக லட்சியங்க்ளோடு அரசியலுக்கு வந்த கட்சி, அரசியலுக்கு வந்தபின்னர் லட்சியங்களைத் தேடும் கட்சியல்ல என்று கணேசன் கூறினார்.

மேலே செல்க

ஜெயேந்திரர் கைதில் மனித உரிமை மீறல் ஏதும் இல்லை என்கிறார் மனித உரிமையாளர் ஹென்றி-- சிறையில் சாதிப்பாகுபாட்டை சாடுகிறார்

ஹென்றி டிபேன் செவ்வி

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவர் சிறையில் நடத்தப்படும் விதம் ஆகியவை குறித்து தனக்கு பல பிரச்சினைகள் உள்ளன என்று கூறிய அவர், ஜெயேந்திரருக்கு சிறையில் ஒரு குறிப்பிட்ட சாதியைச்சேர்ந்த கைதி ஒருவரால் உணவு சமைத்து தரப்படுவது சரியல்ல, இது சாதிப்பாகுபாட்டை அரசே நிலைநிறுத்துவதாகும் என்றார்.

ஆனால், இந்த விசாரணைக்கு தலைமை தாங்கும் அதிகாரியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டிருப்பது சரியல்ல, ஏனென்றால் அவரே ஒரு சர்ச்சைக்குரிய அதிகாரி, இவ்வளவு அரசியல் செல்வாக்குள்ள ஒரு பிரமுகர் சம்பந்தப்பட்ட வழக்கை இது போன்ற ஒரு அதிகாரியிடம் கொடுத்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தாது என்றார்.

மேலே செல்க

'பத்திரிகைகள் மடத்தின் விளம்பரத்தை வெளியிட்டது தவறு அல்ல'- தினமலர் நாளேட்டின் பதிப்பாளர் ஆர்.லட்சுமிபதி

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளில் வெளிவரும் நிலையில் அவற்றை மறுத்து தன்னிலை விளக்கம் அளிக்கும் நோக்கில்தான் காஞ்சி மடம் பத்திரிகை விளம்பரங்களை அளித்தது, இதைச் செய்யுமாறு சில பத்திரிகையாளர்கள் காஞ்சி மடத்திடம் கோரினார்கள் என்கிறார், இந்த விளம்பரங்களை வெளியிட்ட பத்திரிகைகளில் ஒன்றான தினமலர் ஏட்டின் பதிப்பாளர் ஆர். லட்சுமிபதி.

தினமலர் லட்சுமிபதி பேட்டி

காஞ்சி மடாதிபதி கைதை அடுத்து, இளைய மடாதிபதி மற்றும் மடத்தின் நிர்வாகிகள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை, எனவேதான் அவர்கள்
மடத்தின்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மறுப்புகள், விளக்கங்கள் அளிக்க வில்லை என்றார் லட்சுமிபதி.

மேலே செல்க

'சங்கராச்சாரியார் கைது மடத்தின் மீதான ஒரு பழிவேட்டை அல்ல' - முன்னாள் தமிழக பொலிஸ் தலைவர் வி.வைகுந்த்

வி.வைகுந்த் செவ்வி

காஞ்சி மாடாதிபதி சங்கராச்சாரியாரின் கைது மற்றும் அதன் பின்னான செயற்பாடுகளில் தமிழக பொலிஸார் மிகவும் சிறப்பாகவும், முறையாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் செயல்படுவதாக தமிழக காவல் துறையின் முன்னாள் தலைவர் வி.வைகுந்த் கருத்து கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பொலிஸ் தரப்பில் ஏற்படக்கூடிய தவறுகள் மக்கள் மத்தியில், தமிழக பொலிஸார் தொடர்பில் மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதால், இது தொடர்பில் பொலிஸார் எனோதானோ என்று செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணை தொடர்பான பரபரப்பான செய்திகளை பொலிஸார் கசிய விடுவதில்லை என்றும் பத்திரிகைகளே இதற்கு பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இது ஒரு கொடூர கொலை சம்பந்தப்பட்ட விடயம் என்பதாலும், ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கப்பட்டது போன்ற ஆட்களை மிரட்டும் சம்பவங்கள் நடந்துள்ளதாலும், சங்கராச்சாரியார் பணபலம் மிக்கவர் என்பதாலும் அவரை பிணையில் விடுவித்தால் அதன் மூலம் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கைகளுக்கு அது வழிவகுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரமன்றி ஒரு ஆச்சாரியாரே இப்படி நடந்துவிட்டாரே என்று கோபமடைந்துள்ளவர்களால், சங்கராச்சாரியாரின் சொந்தப் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படலாம் என்பதாலும் அவரை பிணையில் விட மறுப்பதில் நியாயம் இருப்பதாகவும் வைகுந்த் தெரிவித்துள்ளார்.

மேலே செல்க

சிறையில் ஜெயேந்திரர் நலமுடனே இருக்கிறார்: காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர்

சுந்தரேச ஐயர் செவ்வி

கடந்த சில வாரங்களாக கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனு இருப்பதாக, நேற்று சிறையில் அவரைச் சந்தித்த காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால் ஒருவேளை உச்ச நீதிமன்றம் செல்லும் உத்தேசம் இருக்கிறதா என்று கேட்ட போது, இது தொடர்பாக ஜெயேந்திரர் வழக்கறிஞர்களைச் சந்தித்ததாகவும், சட்ட நிபுணர்களே இது குறித்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மடாதிபதியின் அதிர்ச்சிக் கைதினை மடமும், மடத்தின் ஆதரவாளர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றதற்கு, ஜெயேந்திரரின் கைது நடந்த சமயம் முதல் இரண்டு நாட்கள் மடத்திற்கு வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்றும், ஆனால் மடத்தில் இப்பொழுது சகஜ நிலை திரும்பி பலரும் வருகிறார்கள், அனைத்து பூஜைகளும் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபல தமிழ் பெண் எழுத்தாளர் ஒருவர் ஜெயேந்திரர் தன்னிடம் தகாத உறவு கொள்ள முயன்றதாக தெரிவித்துள்ள புகார்கள் குறித்து கேட்ட போது, நடைபெற்றதாக குற்றம் கூறப்படும் சம்பவம் 12 ஆண்டுகளுக்கும் முன்னர் நடைபெற்றது. தவிர, இது குறித்து நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார் சுந்தரேச அய்யர்.

ஜெயேந்திரர் மீதான வழக்கு விசாரணை முடிச்து அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை மடாதிபதி பொறுப்பில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் என துவாரகபீத் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் கோரியுள்ளார்.

இதனிடையே இந்திய நாடாளுமன்றத்தில் காஞ்சி மடாதிபதி கைது குறித்து விவாதம் நடைபெற்ற போது ஜெயேந்திரர் சிறையில் நடத்தப்படும் விதம் சரியில்லை எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியினர் கூறியதற்கு அதிமுக, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த்னர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டார்: போலீஸ்

கொலைவழக்கில் கைதான காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் போலீஸ் காவலில் இருந்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று தமிழக அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் துரைசாமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் கோபாலன் வழங்கிய தகவல்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவியது தாமே என்று போலீஸ் காவலில் விசாரணையின் போது ஜெயேந்திரர் ஒப்புக்கொண்டதாகவும், அதை விடியோ படம் எடுத்து வைத்திருப்பதாகவும் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

தற்போது வேலூர் மத்திய சிறையில் இருந்துவரும் ஜெயேந்திரருக்குப் பிணை வேண்டும் என்று அவர்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, அவருக்குப் பிணை தரக்கூடாது என்று வாதிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

தவிர, ஜெயேந்திரருக்கு நன்கு தெரிந்த திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்மணிக்கு இக்கொலையில் பங்கு ஏதாவது இருக்கிறதா என்பதையும் காவல்துறை விசாரிக்க விழைகிறது என்று வாதிட்டார் துரைசாமி.

மேலே செல்க

ஜெயேந்திரர் கைதுக்கெதிராக பிராமண சங்கம் ஆர்ப்பாட்டம்

பிராமண சங்கத் தலைவர் நாராயணன் செவ்வி

ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைதாகியிருப்பதைக் கண்டித்து பாஜக மற்றும் அதன் சகோதர ஹிந்துத்துவா அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

தமிழ் நாடு பிராமணர் சங்கமும் நேற்று ஜெயேந்திரர் கைதக் கண்டித்து தமிழ்நாட்டின் சில நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாகத் தகவல்கள் வந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏன் என்று தமிழ் நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் விளக்கினார்.

காஞ்சி மடாதிபதியின் உன்னத நிலையைப் புறக்கணித்துவிட்டு அவரை இழிவுபடுத்தும்விதமாக தமிழக போலீசார் அவரைக் கைதுசெய்து நடத்தியதால் தமது மனது புண்பட்டதாகவும் அதனால்தான் தாங்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளதாகவும் நாராயணன் கூறினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பிராமணர் சங்கம் ஏற்கிறது என்றாலும், ஒரு நபரின் சமுதாய நிலையினைக் கருதி அவர்களைக் கைது செய்யாமல் நீதிமன்றம் வரவழைத்து விசாரணை நடத்தும் வழிமுறை பல முறை கையாளப்பட்டிருக்கிறது; ஆனால் ஜெயேந்திரர் விவகாரத்தில் முதலில் கைது செய்துவிட்டு பிறகு சாட்சியைத் தேடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஜெயேந்திரரை சிறையில் அடைத்துவைத்துவிட்டு அவருக்கு தனி சமையல்காரர் பூஜைக்கு அனுமதி என்று சலுகைகள் காட்டுவதைத் தவிர்த்து அவரை ஒரு விடுதியிலோ அல்லது காஞ்சிபுரம் மடத்திலேயேகூட தங்கவைத்து விசாரித்திருக்கலாம். தமிழக அரசு அப்படிச் செய்யாமல் மடாதிபதியைப் பழிவாங்கும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டுள்ளது என்று நாராயணன் தெரிவித்தார்.

அவசியமேற்படுமானால் பிராமணர்களாகிய தாங்களும் வீதிக்கு வருவோம் போராட்டங்களில் இறங்குவோம் என்பதை அரசுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தைச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலே செல்க

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீதான கொலைவழக்கை ஊடகங்களே வழக்காட முடியுமா?

முன்னாள் தினமணி ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் கருத்து

நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு இருக்கையில், வழக்கை திசைதிருப்பும் வண்ணமோ அல்லது , வழக்கின் மீது தாக்கம் செலுத்தும் வண்ணமோ செய்திகளை வெளியிடுவது, இது ஊடகங்களால் நடத்தப்படும் விசாரணை,
அதாவது trial by media என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இவ்வாறன பரபரப்பான வழக்குகளைப் பற்றி ஊடகங்கள் செய்திவெளியிடும் போக்கு, பிரச்னைக்குரிய ஒன்று, ஆனால், வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்குடன் செய்தி ஊடகங்கள் இதைச் செய்து வருகின்றன என்று வருத்தத்துடன் கூறினார் ஐராவதம் மகாதேவன்.

இந்தப் பின்னணியில், பிறகு, அத்தகைய வழக்குகளில் வேறுவிதமான தீர்ப்புகள் இறுதியில் வரும்போது, பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் தாங்கள் செயல்பட்ட விதம் பற்றி மறுபரிசீலனை செய்வதாகத் தெரியவில்லை என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

மேலே செல்க

ஜெயேந்திரரின் வாக்குமூலம் பற்றிய பத்திரிகைச் செய்திகள் பொய் – மடாதிபதியின் வழக்கறிஞர்

வழக்கறிஞர் தியாகராஜன் செவ்வி

சிறையில் இருக்கும் காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் போலீஸ் காவலில் இருந்த போது தன் மீதுள்ள குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார் என்ற பத்திரிகைச் செய்திகளை அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான காஞ்சிபுரம் தியாகராஜன் வன்மையாக மறுத்தார்.

ஜெயேந்திரரை அவரது வழக்கறிஞர்கள் தினமும் கண்டு பேசி வருவதாகவும், ஒரு பொழுதும் அவர் தான் அப்படிப்பட்ட ஒரு வாக்குமூலத்தை போலீசாருக்கு கொடுத்ததாக தம்மிடம் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட வாக்குமூலங்கள் போலீசாரால் மிக ரகசியமான முறையில் எடுக்கப்படுவன என்றும், அதை ஏதோ அருகில் நின்று கேட்டது போல சொல்வதும் எழுதுவதும் கற்பனை வேலைகளாகத்தான் இருக்க முடியும் என்றும் கூறினார் வழக்றிஞர் தியாகராஜன்.

இது ஜேயேந்திரரின் குணாம்சங்களையும், அவருக்கு எதிரான வழக்கையும் பாதிக்கத் தக்க விதத்தில் உள்ளது என்று சொன்ன அவர், இந்த செயலை செய்த பத்திரிகைகளுக்கு எதிரா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தாங்கள் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

மேலே செல்க

கைது விவகாரத்தில் ஆர்.வெங்கட்ராமன் நிலைப்பாடு குறித்து இரா.செழியன்

இரா.செழியன் பேட்டி

குடியரசுத் தலைவர் போன்ற அரசியல் சட்டப் பதவிகளை வகித்தவர்கள் இவ்வாறு ஒரு பரபரப்பான கொலை வழக்கில் வெளிப்படையாக வீதிக்கு வந்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அரசியல் மரபுகளுக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் சட்ட மற்றும் மரபுகள் குறிது எழுதிவருபவருமான இரா. செழியன் அவர்களிடம் கேட்டபோது, இவ்வாறு உயர் பதவிகளை வகித்தவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது மரபுகளுக்கு உட்பட்டதல்ல என்றார்.

மேலே செல்க

மடங்கள் சாதி ரீதியான அமைப்புகளே என்கிறார் மதங்களையும் மடங்களையும் ஆராய்ந்துவரும் டாக்டர். தொ.பரமசிவம்

பரமசிவம் செவ்வி

தமிழகத்தில் உள்ள திருமடங்களின் வரலாற்றை வைத்து பார்க்கும் போது, இவை பொதுவாக குறிப்பிட்ட சாதிகள் சார்ந்த நிறுவனங்களாகவே இருந்துவந்துள்ளன என்பது கண்கூடு என்றார் , மதங்கள் மற்றும் மடங்க்ள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவரும் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவு தலைவராகவும் உள்ள டாக்டர். தொ.பரமசிவம்.

ராமானுஜர் ஜீயர்களின் துணையுடன் வைணவ மடங்களை நிறுவினார், சைவ மடங்கள் பெரும்பாலும் வேளாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளன, ஆனால் காஞ்சி மடம் 'ஸ்மார்த்தா' பிராமணர்களின் மடமாகவே இருந்து வருகிறது என்றார் அவர்.

மடங்கள் சொத்துடைமை நிறுவனங்களாகவே இருந்து வந்துள்ளன என்பதும், காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து, பல மடங்கள் தமது சொத்துக்களை இழந்து வந்துள்ள நிலையில், காஞ்சி மடம் மட்டும், மேலும் மேலும் சொத்துக்களை குவித்து வந்துள்ளது என்பதும் தெளிவாகிறது என்றார் அவர்.

மடங்களின் இத்தகைய வரலாற்றை வைத்து பார்க்கும்போது, குருத்துரோகம் போன்றவை அந்த மடங்களில் நடந்துகொண்டுதான் இருந்திருக்கின்றன என்றார் பரமசிவம்.

மேலே செல்க

முறையான விசாரணை நடக்குமா?

சுந்தர ராமசாமி செவ்வி

ஜெயேந்திரர் வழக்கில், முறையான விசாரணை நடக்குமா என்று சந்தேகம் தெரிவித்துள்ள தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி,ஜெயேதிரருக்கு அகில இந்திய அளவில் மதவாத சக்திகளிடையே ஆதரவு இருப்பதாலும் வழக்கு நடைபெறும் நீதிமன்றங்களின் முன்னர் அவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாலும் இத்தகைய சந்தேகம் தமக்கு எழுவதாகத் தெரிவித்தார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர் , குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படும் வரையிலாவது, மடாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார் அவர்.

அதே சமயத்தில், இதைக் காரணம் காட்டி, மடத்தை அரசு கையிலெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் , மடத்தின் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க அரசு தனக்குள்ள சட்ட ரீதியான அதிகாரங்க்ளைப் பயன்படுத்தலாம் என்றார் சுந்தர ராமசாமி.

மேலே செல்க

'காஞ்சி மடக் கணக்குகளை அரசு ஆராய்வதாகத் தோன்றவில்லை'

இராம வீரப்பன் பேட்டி

இந்த கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த , முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் இராம.வீரப்பன், இந்து திருமடங்களை கையிலெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மடங்களினால் நடத்தப்படும் அறக்கட்டளைகளின் நிதிக் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் அதிகாரம் மட்டும்தான் அரசுக்கு இருக்கிறது என்றார்.

திருவாவடுதுறை ஆதினம் தொடர்பாக முன்பு ஒரு சர்ச்சை எழுந்தபோது, தான் இந்து அறநிலைய அமைச்சராக இருந்த காலத்தில், இது போன்ற மடாதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை தரும் ஒரு சட்டத்திருத்த மசோதா ஒன்று தமிழக சட்டபேரவையின் (அப்போதைய) இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, அது மத்திய அரசின் ஒப்புதல் பெறாததால் சட்டமாக முடியாமல் போய்விட்டது என்றார் வீரப்பன்.

ஆனால் கர்நாடகா போன்ற மாநிலங்களில், இது போன்ற மடங்களுக்கு மடாதிபதிகளை நியமிக்குமுன் , அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை என்றார்.

மடம் சார்ந்து நடத்தப்படும் அறக்கட்டளைகளிலிருந்து, பணம் சட்ட விரோதச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டால் , அதைக்காரணம் காட்டி, அந்த அற நிறுவனங்களை அரசு கையகப்படுத்தமுடியுமா என்று கேட்டதற்கு பதிலளித்த வீரப்பன், இந்த அறக் கட்டளைகள் வேறு சட்டங்களின் கீழ் வருகின்றன, அந்த அறக்கட்டளைகளின் கணக்கு வழக்குகளை அரசு கண்காணிக்க முடியும் ஆனால் இந்த மாதிரி நடவடிக்கைகள் காஞ்சி மட விவகாரத்தில் எடுக்கப்பட்டது போல தோன்றவில்லை என்றார்.

மேலே செல்க

மடத்தை அரசு எடுக்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது என்கிறார் சோ ராமஸ்வாமி

சோ செவ்வி

மடாதிபதி மீது கொலை வழக்கு , கொலையாளிகளுக்கு மடத்தின் வங்கிக் கணக்கிலிருந்தே பணம் கொடுக்கப்பட்டிருப்பதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருப்பது போன்றவை, அரசு, மடத்தின் நிர்வாகம் மற்றும் நிதிவிவகாரங்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் , மடத்தையே கையிலெடுக்கவேண்டும் என்று ஒரு சாரார் கூறிவரும் கருத்துகளைப்பற்றி கேட்டதற்கு, இவையெல்லாம் இந்த கட்டத்தில் வெறும் குற்றச்சாட்டுகள்தான், குற்றச்சாட்டுகள் ருசுவானால் மட்டுமே இது பற்றி பேசமுடியும், இந்த தருணத்தில், வெறும் குற்றச்சாட்டுகளை வைத்து மடத்தை கையிலெடுக்க வேண்டும் என்று கோருவது நியாயமாக இருக்காது என்றார் சோ.

மேலே செல்க

ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அல்ல என்கிறார் 'இந்து' ஆசிரியர் ராம்

'இந்து' ராம் செவ்வி

தமிழோசைக்கு அளித்த பேட்டியில், தமிழகப் போலிசார் இந்த விஷயத்தில் நேர்மையாக நடந்துகொண்டுள்ளது போல் தோன்றுவதாக அவர் கூறினார்.

ஹிந்துத்துவா அமைப்புகள் இந்த வழக்கு இந்துக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் விமர்சித்திருப்பதை அவர் நிராகரித்தார்.

மேலும் ராம் கூறுகையில், சங்கர மடம் போன்ற மத நிறுவனங்களுக்கு, அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போன்றோர் வந்து, மதத் தலைவர்களின் காலில் விழுவது, ஆசி பெறுவது போன்ற விஷயங்களை தான் விரும்பவில்லை , தனிப்பட்ட முறையில் அவர்கள் வருவது வேறு விஷயம் ஆனால் இதற்காக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்றார்.

ஜயேந்திரர் தலைமையில், சங்கரமடம் , ஒரு மத பீடம் என்ற நிலைக்கு அப்பால் சென்று, வர்த்தக நடவடிக்கைகளில் இறங்கியதும் கேள்விக்குறியது என்றார் அவர்.

மேலே செல்க

விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு

வி.ஹெச்.பி. வேதாந்தம் செவ்வி

ஆச்சாரியார் கைது விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பர்ஷத்தின் நிலைப்பாடு பற்றி அவ்வ்வமைப்பின் துணைத் தலைவர் வேதாந்தம் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

சங்கராச்சாரியாரை கைது செய்திருப்பது இந்துக்கள் மத்தியில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ள்தோடு அவர்களது மனதைப் புண்படுத்தியுள்ளது என்று வேதாந்தம் குறிப்பிட்டார்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பிறகு ஆச்சாரியார் நிரபராதி என்று தெரியவரும்போது, இந்த இழப்புகளையெல்லாம் தமிழக அரசால் ஈடுசெய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.

வத்திகானின் பிரதிநிதிகளாகக் கருதப்படும் கிருத்துவ மதத் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மீது நேரடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இந்துமதத் தலைவரிடம் மட்டும் இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது பாரபட்சம் காட்டுவதாக இருக்கிறது என்று குறிப்பிட்ட வேதாந்தம், இந்துக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் சட்டங்களை தாங்கள் ஏற்கத் தயாராக இல்லை என்று கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா வி.ஹெ.பி.யின் கூட்டாளி என்பதை மறுத்த அவர், இந்துக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே தமது கூட்டாளிகள் என்று கூறினார்.

வி.ஹெச்.பி.யின் ஆர்பாட்டத்திற்கு தமிழகத்தில் போதிய ஆதரவு இல்லை என்பதை அவர் மறுத்தார்.

மனித சங்கிலிப் போராட்டம் உள்ளிட்டு, ஆச்சாரியார் கைது தொடர்பாக நாடெங்கிலும் தமது அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்பாட்டங்கள் தொடரும் என்றூ வேதாந்தம் குறிப்பிட்டார்.

சங்கரராமன் யார்?

இந்த வழக்கு தொடர்பாக சில நாட்கள் முன்பு ஐந்து பேர் சென்னையில் போலீசில் சரணடந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ஆச்சாரியார் பெயரையும், அவரது அண்ணன் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்படுவதற்கு முன், காஞ்சி மடம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தவர் சங்கரராமன். காஞ்சி சங்கராச்சாரியார், கடல் தாண்டி, சீனா செல்லக் கூடாது என்று இவர் வழக்கும் தொடுத்தார். இதையடுத்து ஜெயேந்திர சரஸ்வதியின் சீனப் பயணம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரராமன் கொல்லப்பட்ட உடனேயே இது தொடர்பில் சங்சராச்சாரியாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கேள்வி எழுப்பியும், விசாரணைகள் வேண்டும் என்று கோரியும் காஞ்சிபுரம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கொல்லப்பட்ட சங்கரராமன் சங்கராச்சாரியாருக்கு எழுதியிருந்த கடிதங்களும் தமிழகத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது. பல்வேறு முறைகேடுகளில் சங்கராச்சாரியார் ஈடுபட்டிருப்பதை காட்டும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக சங்கரராமன் அக்கடிதங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆச்சாரியார் பிரபலம்

முந்தைய பா.ஜ.க. அரசில் ஆச்சாரியாவின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. ராமர் கோயில் பாபர் மசூதி சர்ச்சையில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட ஆச்சாரியார் முயன்ற போது அவர் பெயர் செய்திகளில் செய்திகளில் மிகுதியாக அடிபட்டது.

ஆனால் அவர் தீவிர வலதுசாரி இந்து அமைப்பான விஷ்வஹிந்து பரிஷத்தின் நிலைபாட்டினை எடுக்கிறார் என்பதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டியதை அடுத்து ஆச்சாரியார் இந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கியிருந்தார்.

ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் துறவறம் பூண்டு ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் முகமாக சென்ற ஆண்டு நடந்த வைபவத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டணியில் இடமெபெற்றிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது அனைவரிடமும் ஒரு வியப்பைத் தோற்றுவித்துள்ளது.