இந்திய அரசு சினிமா துறைக்கு வழங்கக்கூடிய மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதில் 2004ஆம் ஆண்டிற்கான விருது கேரளாவின் பிரபல கலைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இப்படியான விருதுகள் வட மாநிலத்தவருக்கே வழங்கப்படுவதாக புகார் நிலவும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்கும், தற்போது அடூர் கோபால கிருஷ்ணனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது தென்னிந்தியருக்கு மனநிறைவைக் கொடுக்கலாம். அடூர் கோபாலகிருஷ்ணன் இதுவரை ஒன்பது படங்களைத்தான் இயக்கியுள்ளார், என்றாலும் அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவை. ‘ரியலிஸம்’ எனப்படும் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களையும் தாண்டி புதுமைகளை செய்து கலைப்படங்களை இயக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர் அடூர் கோபாலகிருஷ்ணன் என்று கூறுகிறார் எல்.வி.பிரசாத் திரைப்படப் பயிற்சிக் கல்லூரி இயக்குநரான கே.ஹரிஹரன். கேரள சினிமா ரசிகர்களின் ரசனைத் தரத்தை உயர்த்தியதில் பெரும் பங்கு அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு என்கின்றார் சினிமா விமர்சகர் சசிகுமார். |