Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தலைநகர் தமிழர்கள்
 
டெல்லித் தமிழர்கள் சிலர்
இந்தியத் தலைநகர் டெல்லியில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மிகப் பங்களிப்பு பற்றிய சிறப்புத் தொடர்.

ஒன்பதாவது பாகம்- டெல்லித் தமிழர்களின் அரசியல் மற்றும் ஆன்மிகப் பங்களிப்பு.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி, நவீன இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து தற்போதைய உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரம், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என தலைநகரில் உயர் பதவி வகித்த பல தமிழர்களைச் சொல்ல முடியும்.

குறிப்பாக, அரசியலில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவருமே தமிழகத்தை அரசியல் தளமாகக் கொண்டு, தலைநகருக்கு வந்தவர்கள் என்று சொல்லலாம். தற்போது, பிராந்தியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து, கூட்டணி ஆட்சி முறை வலுப்பெற்றுள்ள நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, டெல்லியில் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், டெல்லியில் உள்ள தமிழர்கள் எந்த அளவுக்கு, டெல்லி அரசியலில் பங்களிப்பை ஆற்றி வருகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டாமா?

அப்படிப் பார்க்கும்போது, அந்தப் பங்களிப்பு மிக மிகக் குறைவு என்றே சொல்கிறார்கள். தற்போதுதான், இரண்டு தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவில், நகராட்சி அளவில் தலா ஒரு வார்டு கவுன்சிலர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். அந்தத் துவக்கத்துக்கே பெரும் தடைகளைத் தாண்டிவர வேண்டியிருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்.

கட்சியில் கடுமையாக உழைத்ததால்தான், கவுன்சிலராகப் போட்டியிட தனக்கு வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்கிறார் சகூர்பூர் பகுதியின் காங்கிரஸ் கவுன்சிலர் ராஜா.

அதே நேரத்தில், அரசியலில் தங்களுக்குரிய இடத்தைப் பிடிக்கப் போராடுவதில், தமிழர்களிடையே தயக்கம் இருப்பதாகக் கவலைப்படுகிறார் அவர்.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சாகேத்தில் வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாகராஜன்,
டெல்லி அரசியலில் நுழைந்தாலும், ஆபத்தான பல சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதாகச் சொல்கிறார்.


எட்டாவது பாகம் - தமிழ் அமைப்புகளின் செயல்பாடும் நாடகத் துறைப் பங்களிப்பும்

டெல்லித் தமிழ்ச் சங்கம், கடந்த 60 ஆண்டுகளாக தலைநகரில் தமிழ் மக்களின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழர்களுக்காக ஓர் அமைப்புத் தேவை என்ற நோக்கத்துடன் சிறிய அறையில் துவக்கப்பட்ட தமிழ்ச் சங்கம், பல தடைகளைக் கடந்து, இன்று டெல்லி ராமகிருஷ்ணா புரத்தில் தனக்கென்று ஒரு தனிக் கட்டடத்தை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது.

அந்தத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு அரசியல்வாதிகள், கலைஞர்கள், அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை ஆற்றியதாக நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

அந்தத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் குறித்து விளக்கிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முந்தைய காலங்களில் டெல்லியை நோக்கி வரும் தமிழர்களுக்கு உதவியதைப் போல தமிழ் சங்கத்தால் தற்போது உதவ முடியவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழர்களிடையே ஒற்றுமையில்லை என்று தமிழ்ச் சங்க நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் பாலா ஆதங்கப்படுகிறார்.

இருந்தபோதும், டெல்லித் தமிழர்கள் இடையே சுய நல அமைப்புக்கள் பல இருப்பதாக பத்திரிகையாளர் பென்னேஸ்வரன் சொல்கிறார்.

அதே நேரத்தில், தமிழ் அமைப்புக்களின் இலக்கியப் பங்களிப்புக் குறித்துப் ஓய்வு பெற்ற டெல்லி தலைமைச் செயலர் ரெகுநாதன் பெருமை கொள்கிறார்.

டெல்லித் தமிழ் அமைப்புக்கள் மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவிக்கிறார்.

நாடகத் துறையில் பங்களிப்பு

டெல்லியில், தமிழ் நாடகக் குழுக்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன, தமிழ் நாடகங்களுக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளது என்பது குறித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியில் நாடகங்களை நடத்தி வரும் நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநரான மத்திய அரசு அதிகாரி கே. வாசுதேவன் விவரித்தார்.

அதே நேரத்தில், தமிழ் நாடகங்களை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் வாசுதேவன் கவலை வெளியிட்டார்.

டெல்லியில் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்த நடிகர் டெல்லி கணேஷ், தொலைக்காட்சிகளின் தாக்கம், டெல்லியிலும் நாடகக் கலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்.

அதே நேரம், பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும், நாடகக் கலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஈடுபாடும், உத்வேகமும் சிறிய பிரிவினரிடமாவது இருப்பதாக நாடக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


ஏழாவது பாகம் - கல்வித் துறை பங்களிப்பும் தமிழ்ப் பள்ளிகளின் நிலையும்

டெல்லியில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என எல்லா கல்வி நிறுவனங்களிலும் தமிழர்களின் பங்களிப்பு இருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகம் என பல கல்வி நிறுவனங்களில், விரிவுரையாளர்கள் முதல் பேராசிரியர்கள் வரை அனைத்து நிலைகளிலும் தமிழர்களைக் காண முடிகிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டெல்லி பல்கலைக் கழகத்தின் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் அ. மாரியப்பன், தமிழர்களின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகள்

டெல்லித் தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் ஏழு பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆண், பெண் இருபாலருக்குமான இந்தப் பள்ளிகளில் சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கிறார்கள்.

டெல்லித் தமிழ் கல்விக் கழகத்தின் தலைவர் கருப்பையா மற்றும் துணைத் தலைவர் உலகநாதன் அந்தப் பள்ளி துவக்கப்பட்டது குறித்து விளக்குகிறார்கள் .

ஆனால், இங்குள்ள பல மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பது பெரும் சவாலாக இருப்பதாக தமிழாசிரியை லலிதா சீனிவாசன் சொல்கிறார்.

பல மாணவர்கள் தமிழில் படிப்பதற்கே தடுமாறிக் கொண்டிருப்பது கவலையளிப்பதாக இருந்தாலும், ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கு மத்தியில் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருக்கும் மாணவ மாணவியரையும், அவர்களை அங்கு படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டும் பெற்றோரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும் என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்படுகிறது.

அதே நேரத்தில், தமிழ் கல்விக் கழகப் பள்ளிகளின் தரம் மிகவும் குறைந்துவி்ட்டதாகவும், அதற்கு நிர்வாக முறைகேடுகள்தான் முக்கியக் காரணம் என்றும் பத்திரிகையாளர் பென்னேஸ்வரன் தெரிவிக்கிறார்.

மேலும், திசை மாறிச் செல்லும் டெல்லித் தமிழ் கல்விக் கழகப் பள்ளிகை சரியான பாதையில் கொண்டு செல்ல சட்டத்தின் உதவியை நாடப் போவதாகச் சொல்கிறார் பென்னேஸ்வரன்.

யாரிடமும் ரொக்கமாக நன்கொடை வாங்குவதில்லை என்று டெல்லித் தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் கூறினாலும், டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலர் ரெகுநாதன் கருத்து அதற்கு எதிர்மறையாகவே இருந்தது.

பல அறிஞர்களையும், தலைவர்களையும் உருவாக்கிய டெல்லித் தமிழ் கல்விக் கழகத்தின் பள்ளிகள் தற்போது தரமிழந்து வருவது குறித்து தமிழ் மக்கள் பலரும் கவலை தெரிவிக்கிறார்கள்.


ஆறாவது பாகம்- கலப்புத் திருமணங்கள்

இந்தப் பகுதியில், தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பில், கலப்புத் திருமணங்கள் மற்றும் தமிழ் மொழியின் மீதான ஈடுபாடு குறித்துப் பார்க்கலாம்.

கலப்புத் திருமணங்கள் என்பது இன்றைய சமூகத்தில் மிகச்சாதாரணம். சாதிய சங்கிலிகளில் இருந்து விடுபட, கலப்புத் திருமணங்களை அரசே ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், வட இந்தியர்களும் தென்னிந்தியர்களும் கலப்புத் திருமணம் செய்வது பல அம்சங்களில் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, டெல்லியில் உள்ள தமிழர்கள், வட இந்தியர்களுடன் கலப்பு மணம் புரிவது, கலாசார ரீதியாக, மிகுந்த முற்போக்கான சிந்தனையாகப் பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் குடியேறி, தலைநகரையே தங்கள் சொந்த ஊராக மாற்றிக் கொண்ட தமிழர்களின் குழந்தைகள்தான், இதுபோன்ற கலப்புத் திருமணங்களுக்கு அதிகம் பங்களிப்பு ஆற்றுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், குழந்தைப் பருவத்திலிருந்தே டெல்லி்க் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்துவிடுவதால், அவர்கள், வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு பார்ப்பதில்லை என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.


ஐந்தாம் பாகம் - தமிழர்களின் கலாசாரப் பங்களிப்பு

டெல்லித் தமிழர்களைப் பொறுத்தவரை - பல தலைமுறைகளாக தலைநகரில் வாழ்ந்துவருபவர்கள் ஆனாலும் சரி, சில ஆண்டுகளாகக் குடியிருப்பவர்கள் ஆனாலு்ம சரி - பெரும்பாலானவர்கள், தங்கள் கலாசாரத்தை அதிகபட்சம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பதைக் காண முடிகிறது.

ஆனால், இளைய தலைமுறையினரிடம் அத்தகைய எண்ணம் ஆழமாக இல்லை என்றும், ஆண்டுகள் ஓடும்போது அவர்களும் தங்கள் கலாசாரத்தை விட்டு முழுமையாக விலகிப்போய்விடுவார்கள் என்ற கவலையும் ஒரு பக்கம் இருக்கிறது.

அதனால், இளம் பிராயத்திலிருந்தே குழ்நதைகளுக்கு கலாசார உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் மூத்த தமிழ் மக்கள் பலரிடம் இருப்பதை அறிய முடிந்தது.

அப்படி ஆர்வம் கொண்டதால், 84 வயதிலும் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் களத்தில் இறங்கிவிட்டவர் ராமச்சந்திரன்.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோரது அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர்.

தமிழ்நாட்டிலிருந்து வந்து கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொண்ட குழந்தைகளுக்கு, மேடை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கலை அமைப்பில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அந்தக் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு ஊக்கத் தொகைத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது அந்த அமைப்பு.

டெல்லியில் தமிழ் கலாசாரத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இசைப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர் ஜெயந்தி அய்யர்.

வட இந்தியர்கள் கூட கர்நாடக இசையில் ஆர்வமாக இருப்பதாகக் கூறும் ஜெயந்தி அய்யர், அவர்களின் வசதிக்காக தமிழும் கற்றுக்கொடுகக் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஜெயந்தி அய்யர், நேரில் மட்டுமன்றி, இணையதளம் மூலமாகவும் இசை கற்றுக் கொடுக்கிறார்.


நான்காம் பாகம் - தொடரும் டெல்லித் தமிழர்களின் சமுகப் பங்களிப்பு

பார்வையற்ற சிவகாமி தன்னைப்போன்ற குழந்தைகளுக்கு கண்களாய் விளங்குகிறார்
தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை என்று பார்க்கும்போது, அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்துடன் ஒருங்கிணைந்து வாழ்வது மட்டுமன்றி, அந்த சமூகத்துக்கு தங்களால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

எனது இனம், எனது சமுதாயம் என்று பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பங்களிப்பை ஆற்றுவதில் முன்னோடியாகச் செயல்படுவர் சிவகாமி. பார்வையிழந்த அவர், தன்னைப் போலவே பார்வையிழந்த பலருடன் சேர்ந்து, பார்வையற்ற அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். அவர்களுக்கும் நிறைவான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஏராளமான குழந்தைகளுக்கு கண்களாகத் திகழ்ந்து வருகிறார்.

மரணமடைந்த ஆயிரக்கணக்கானோருக்கு தானாக தேடிச் சென்று சேவை செய்யும் பணியில் பல ஆண்டுகாலமாக ஈடுபட்டு வருகிறார் பொள்ளாச்சி கணேசன். டெல்லியில் உள்ள கோயில் ஒன்றின் நிர்வாக அறங்காவலராகவும் இருக்கும் அவரது சேவைக்கு, தமிழர்கள் மட்டுமன்றி வட இந்தியர்களும் பக்கபலமாக இருக்கிறார்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து வந்து, டெல்லியில் மளிகைக் கடை நடத்தி வரும் பாலமுருகன், சவால்கள் இருந்தாலும் இங்கு பிரச்சினைகள் இல்லை என்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் டெல்லிக்கு வராமல் இருப்பதே நல்லது என டெல்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கிரு்ஷ்ணமூர்த்தி கூறுகிறார்.

தமிழர்கள் என்றால் நேர்மையாகவும், கடுமையாகவும் உழைப்பவர்கள் என்ற பெயர் இருப்பதாகச் நாடாளுமன்ற மக்களவைச் செயலகததில் பணிபுரியும் கணேஷ் சொல்கிறார்.


மூன்றாம் பாகம் - டெல்லித் தமிழர்களின் சமூகப் பங்களிப்பு

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்
தமிழர்களைப் பொருத்தவரை, உலகின் எந்த இடத்தில் வாழ்ந்தாலும், உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்களிப்புச் செய்து வருவதாக ஒரு கருத்து உண்டு. பலவிதமான இடையூறுகளைச் சந்தித்தாலும், அவற்றைச் சமாளித்து, சகிப்புத் தன்மையுடன் வாழ்வதில், தமிழர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று சொல்வார்கள்.

டெல்லியில் உள்ள தமிழர்களைப் பொருத்தவரை, ஜனரஞ்சகமான தமிழர்களைக் காணலாம். எல்லா இடத்திலும், ஏதாவது ஒரு வகையில், தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அவர்களது பங்களிப்புப் பற்றி பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களைக் பகிர்ந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித், அவர்களுடைய பங்களிப்பு அபரிமிதமானது என்றும், மற்றவர்களைவிட எந்த வகையிலும் குறைந்துபோகவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னாள் டெல்லி தலைமைச் செயலர் ரெகுநாதன்
தமிழர்கள், எந்த ஊரில் வாழ்ந்தாலும் அந்த ஊர் மக்களோடு சேர்ந்து இணக்கமாகவும், நட்புறவுடனும் வாழத் தெரிந்தவர்கள் என்கிறார் டெல்லியின் தலைமைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரெகுநாதன்.

டெல்லித் தமிழர்களைப் பொருத்தவரை, பிரச்சினைகள் இருந்தாலும் அதை சகித்துக் கொண்டு செல்லும் மனப்பக்குவம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார், டெல்லி காவல் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் கண்ணன் ஜெகதீசன் அவர்கள்.

டெல்லியின் வடக்குப் பகுதியில், சகூர்பூர் என்ற இடத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் அந்தப் பகுதியில், பலருக்கு சொந்த வீடு இருக்கிறது. கெளரவமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்தப் பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பது மிகக் கடினமாக இருப்பதாகக் கவலை தெரிவித்தார், தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிறுவனச் செயலர் சாளை விஜயகுமார்.

ஆனால், எல்லோருக்கும் அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை என்றும், தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் அங்கீகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்.


இரண்டாம் பாகம்- டெல்லி தமிழர் பொருளாதாரம்

தலைநகர் தமிழர்கள் என்னும் இந்த தொடரின் இரண்டாம் பகுதியில், டெல்லியில் வாழும் தமிழர்களின் பொருளாதாரம் குறித்து ஆராய்கிறார் தங்கவேல்.

பொருளாதார நிலை என்று பார்க்கும்போது, அதிகாரத்தில், அரசுத் துறையில் உள்ள தமிழர்கள் பலர், நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள். அதே நேரத்தில், கடைத்தட்டு மக்கள் பலர், தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே போராடும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

டெல்லியில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள், தமிழ் என்பதைத் தாண்டி, தமிழன் என்ற அடித்தட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து.


முதலாம் பாகம்: டெல்லித் தமிழர்கள் - ஓர் அறிமுகம்

டெல்லித் தமிழர்கள்
டெல்லித் தமிழர்கள்
அந்த வகையில், இந்தியத் தலைநகர் டெல்லியில் வாழும் தமிழர்களும் தமிழ் மக்கள், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழ்வது, ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. வெளிநாடுகளில் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்கவர்கள். டெல்லிக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் வளர்ச்சிக்கும் பல வகைகளில் அவர்கள் பங்காற்றி வருகிறார்கள். சுமார் 1. 7 கோடி மக்கள் தொகை கொண்ட டெல்லியில், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்.

டெல்லியைப் பொறுத்தவரை, தமிழர்கள் ஒரு சிறுபான்மை சமூகமாக இருந்தாலும், அவர்கள் ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். அரசியல், அரசுப்பணி, ஆன்மீகம், கல்வி, கலை, கலாசாரம் என பல துறைகளிலும் இருக்கிறார்கள்.

நடுத்தர குடு்ம்பத்தைச் சேர்ந்த பலர் மத்திய அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட இந்த யுகத்தில், கணினித் தொழில் நுட்பத் துறையில் தமிழர்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. மத்திய அரசுப் பணியில், அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தமிழர்கள் இருக்கிறார்கள்.

பல தமிழர்கள் தங்களுக்கென்று கெளரவமான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நிலையில், இன்னொரு புறம், அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் நிலையிலும் டெல்லியில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஏராளமான கனவுகளுடன் டெல்லிக்கு வந்து, எங்கு செல்வது என்று தெரியாமல், தடுமாறி, திசைமாறிச் சென்ற தமிழர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட டெல்லித் தமிழர்களின் வாழ்க்கை, பங்களிப்புப் பற்றிய ஓர் ஆய்வுதான் இந்தச் சிறப்புத் தொடர்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள