மாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச்சாரம் நிலவுகிறதா?

மூலம்: சௌதிக் பிஸ்வாஸ்,பி பி சி இந்திய இணைய செய்தியாளர்

அண்மையில் வட இந்தியாவில் சில ஆட்டிறைச்சி (மட்டன்) பிரியாணி உணவு வகைகளில், மாட்டிறைச்சி உள்ளதா என்பதனை போலீசார் சோதனை செய்த சம்பவம்,'உணவு பாசிசம்' என்பதற்கு இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS
Image caption இந்தியாவின் பிரபல உணவான 'பிரியாணி'

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில், இஸ்லாமியர்கள் அதிகமுள்ள கிராமங்களில், இந்த அண்மைய உணவு சோதனை நடைபெற்றுள்ளது.

பசுக்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக தண்டிக்கும் சட்டங்கள் அமலில் உள்ள ஹரியானா மாநிலத்தில், பசுக்களை பாதுகாக்க சிறப்பு காவல் படை மற்றும் ' பசு சேவை ஆணையம்' போன்ற வேடிக்கையன பெயர்கள் கொண்ட பல அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் யாரேனும் பசுக்களை கொல்கிறார்களா அல்லது வாகனங்களில் கடத்துகிறார்களா என்பதனை கண்காணிக்க, பசுக்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிரான தொண்டர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

மேலும், பிரியாணி விற்பதை நிறுத்துமாறு உள்ளூர் முஸ்லீம்களிடம் கிராம சபைகள் கூறி வருகின்றன.

பிரியாணியில் மாட்டிறைச்சி கலந்து பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததால், கடந்த வாரத்தில் சோதனைக்காக மாதிரி பிரியாணி உணவுகளை உள்ளூர் போலீஸார் எடுத்துச் சென்றனர்.

தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாக ஏழை பிரியாணி விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நெடுஞ்சாலைகளில் உள்ள பிரியாணி உணவகங்கள் வெறிச்சோடி இருப்பதாக, சில ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் காண்பித்துள்ளன.

பசுக்களை புனிதமாக கருதும் இந்து சமூகத்தினர்

இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்தினரான இந்துக்கள், பசுக்களை புனிதமாக கருதுகின்றனர். ஆனால், இந்தியாவில் வாழும் மற்ற சமூகத்தினர் மாட்டிறைச்சி உண்பதுண்டு.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பசுக்களை புனிதமாக கருதும் இந்து சமூகத்தினர்

இந்தியாவில் ஏறக்குறைய 80 மில்லியன் மக்கள், அதாவது, மக்கள் தொகையில் ஒவ்வொரு 13 பேரிலும் ஒருவர், மாட்டிறைச்சி அல்லது எருமை மாட்டிறைச்சி உண்பதாக ஒரு அரசு புள்ளிவிவரக் கணக்கு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள் ஆவர். ஆனால், 12 மில்லியனுக்கும் மேலான இந்து சமூகத்தினரும் மாட்டிறைச்சி உண்பதாக கூறப்படுகிறது.

கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை விட மலிவான விலையில் கிடைப்பதாலும், ஏழை இஸ்லாமியர்கள், பழங்குடி மற்றும் முன்பு தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரதான உணவாக இருப்பதாலும் மாட்டிறைச்சியின் மீதான தடை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

குறி வைக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சமூகத்தினர்

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக இந்தியாவில் நீண்ட காலமாக மத ரீதியான மோதல்கள் நிலவி வருகின்றன.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் அதிகமாக இலக்காவதும், இகழப்படுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சமூகத்தினர் தான்.

தனக்கு விருப்பமான உணவு வகைகளை உண்பது வரம்பு மீறிப் செயல்படுவதாக சில பகுதிகளில் பார்க்கப்படுகிறது.

இது குறித்து சமூகவியல் பேராசிரியரான அமிதா பவிஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ''தற்போது உணவு பதார்த்தங்கள் விற்கும், பொது இடங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. இது ஒரு புதிய வகையான அச்சுறுத்தும் பாணியாகும்'' என்று தெரிவித்தார்.

''இந்தியாவில் எந்த சமூகத்துக்கும், ஒரே மாதிரியான உணவு கலாச்சாரம் இல்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உயர் வகுப்பு பிரிவினரான, இந்து பிராமணர் சமூகத்தினர் அனைவரும் சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் இல்லை. அதே போல், இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் அனைவரும் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் இல்லை'' என்று டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பாடம் எடுக்கும் நபானிப்பா பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியாவின் உணவு கலாச்சாரத்தை 'சைவ உணவு' என்று விவரிக்கும் முயற்சி என்பது சோம்பல் மற்றும் விஷமத்தனமான செயல் எனக் கூறலாம்.

படத்தின் காப்புரிமை ANKIT SRINIVAS
Image caption பிரியாணி உணவகங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலமான குஜராத்தில், மது விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், கருப்பு சந்தையில் மது விற்கப்படுவது போல, மாட்டிறைச்சி விற்பனையாளர்களை இலக்கு வைத்து சோதனை நடத்தும் 'உணவு கலாச்சார' போலீசார், உணவு பதுக்கலுக்கு காரணமாக அமைந்து விடுகின்றார்கள்.

தாங்கள் எம்மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து யாரும் அறிவுரை வழங்குவதை, மக்கள் விரும்புவதில்லை. தங்களுக்கு விருப்பமான உணவினை உட்கொள்ள தடைகள் இருந்தால், அதற்கு எதிரான மாற்று வழிகளை மக்கள் தாங்களாகவே தேடி கண்டுபிடிப்பர்.