பெங்களூரில் கட்டுக்குள் வந்தது வன்முறை: பிரதமரை சந்திக்க கர்நாடக முதல்வர் முடிவு

காவிரிப் பிரச்சினையால் பெரும் கலவரத்தை சந்தித்த கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், செவ்வாய்க்கிழமையன்று பெரும்பாலும் அமைதி திரும்பியது.

Image caption பாதுகாப்புப் பணியில் அதிரடிப்படை

அதே நேரத்தில், கர்நாடகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து நாளை புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நேரில் விளக்க உள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் 16 காவல் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அது தொடரும் நிலையில், அமைதி திரும்புவதற்கு ஏற்றபடி அந்த உத்தரவைத் தளர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption எலும்புக்கூடு போல காட்சியளிக்கும் கொளுத்தப்பட்ட பஸ்கள்

திங்கள்கிழமை பெங்களூர் நகரில் பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில், பஸ், லாரி, கார் உள்பட 97 வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, 335 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரச்சனைக்கு வன்முறை தீர்வாகாது என்று குறிப்பிட் முதலமைச்சர் சித்தராமையா, வேறு மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். அதேபோல், தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக சித்தராமையை தெரிவித்தார்.

Image caption காவலர்கள் தீவிர ரோந்து

தமது அரசு கூட்டாட்சி தத்துவத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதித்து நடப்பதால் உச்சீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களும், ஊடகங்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Image caption கொளுத்தப்பட்ட பஸ்கள்

செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. சில நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. தமிழ் பத்திரிகைகள் எரிக்கப்பட்டதால் அதன் விநியோகம் நடைபெறவில்லை. ஆனால், பெங்களூரில் போக்குவரத்து துவங்கவில்லை. விமான நிலையத்துக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் போக்குவரத்து செயல்படுகிறது.

காயமடைந்தவர் சாவு

இதனிடையே, திங்கட்கிழமை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தப்பியோட முயன்று காயமடைந்த குமார் (25) என்ற இளைஞர் இன்று உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உமேஷ் என்பவர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.