பெங்களூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்: திரும்பியது இயல்பு நிலை

காவிரிப் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, பெங்களூர் நகரில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, போலீசார் இன்று புதன்கிழமை காலை நீக்கினார்கள்.

Image caption பெங்களூர் தெருக்களில் காவல்துறை

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை ஏற்பட்டது.

திங்கள்கிழமையன்று பெங்களூரில் பெருமளவு வன்முறை ஏற்பட்டது. பஸ், லாரி உள்பட பெருமளவு வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, திங்கள்கிழமை மாலை முதல் பெங்களூர் நகரில், யெஷ்வந்த்புரம், ராஜகோபால் நகர், மாகடி சாலை உள்பட 16 காவல் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஓரளவு சகஜ நிலை திரும்பி வருவதை அடுத்து, கலவரச் சூழ்நிலை மாறியதை அடுத்து ஊரடங்கு உத்தரவை புதன்கிழமை காலை 9 மணி முதல் விலக்கிக் கொள்வதாக பெங்களூர் நகர போலீஸ் ஆணையர் என்.எஸ். மெகரிக் அறிவித்துள்ளார்.

இயல்பு நிலை

இதனிடையே, கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. பெங்களூர் நகரில் பொதுப் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர் இன்று காலை பார்வையிட்டார். அங்குள்ள மக்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனிடையே, தொலைக்காட்சி ஊடகங்கள், காவிரி வன்முறை தொடர்பான செய்திகளை மிக எச்சரிக்கையுடன் ஒளிபரப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கேபிள் டி.வி. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூர் நகர போலீஸ் ஆணையர் எச்சரித்துள்ளார்.