தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

  • 14 செப்டம்பர் 2016

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image caption புதிய சவால்

இந்த நியமனத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜிநாமா செய்தார். அதன்பிறகு, தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், திருநாவுக்கரசர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கோஷ்டிகள் உள்ள நிலையில், அதைச் சமாளிக்க வேண்டிய பெரிய சவால் அவருக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அவர் தலைவராக நியமிக்கப்படுவார் என்று சில மாதங்களுக்கு முன்பு ஊகம் நிலவிய நேரத்தில், இளங்கோவனுக்கு ஆதரவான மாவட்டத் தலைவர்கள், அவரை தலைவராக நியமிக்கக் கூடாது எனக்கோரி தலைமைக்கு கூட்டாக வலியுறுத்தினார்கள். அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து வந்தவர் என்றும், அவர் என்றைக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்றும் அவர்கள் புகார் கூறினர்.

அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசர், பல்வேறு முக்கியப் பொறுப்புக்களை வகித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் இருந்த அவர், பின்னர் தனிக்கட்சி துவங்கினார். அதன்பிறகு, பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலராக உள்ளார்.

அறந்தாங்கி தொகுதியில் இருந்து 6 முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சரவாகவும் பதவி வகித்துள்ளார்.