புதுவை: நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டி

புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Image caption கோப்புப் படம்

இன்று புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கத்தை சந்தித்த தற்போதைய நெல்லித்தோப்பு தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

ஜான்குமாரின் ராஜினாமா கடிதத்தை பெற்ற புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கம் அதனை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்.

இதனால், விரைவில் நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒருவர் முதல்வர் அல்லது அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டால், பொறுப்பேற்று 6 மாதத்திற்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, நாராயணசாமி முறைப்படி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 6-ம் தேதிக்குள் அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தற்போது, டெல்லியில் முகாமிட்டுள்ள நாராயணசாமி, கட்சித் தலைமையை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

முன்னதாக, கடந்த மே மாதம் நடந்த புதுவை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணியில், காங்கிரஸ் 15 இடங்களையும், திமுக 2 இடங்களையும் பிடித்து ஆட்சி அமைத்தது.

தொழிலதிபரான ஜான் குமார், அண்மையில் தான் திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.