தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம்: அரசியல் கட்சித் தலைவர்கள் கைது

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை, முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டங்களில் ஈடுபட்ட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Image caption தேமுதிக போராட்டத்தில் பிரேமலதா பேச்சு

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கர்நாடக மாநிலத்தில்பெரும் வன்முறை வெடித்தது. இதில் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. வாகனங்களின் ஓட்டுனர்களும் தாக்கப்பட்டனர்.

இந்த வன்முறைகளைக் கண்டித்தும் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணக்கோரியும் இன்று தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் அழைப்பு விடுத்தன.

Image caption தேமுதிக போராட்டம்

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

காலை 6 மணியளவில் துவங்கிய இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன.

இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்துபவோர், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துவோர் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறை அறிவித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை காலையில், எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில் மறியலில் ஈடுபட்ட திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.

தே.மு.தி.கவின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டுவருகிறது. இதில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்றாலும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று தனியார் பள்ளிக்கூடங்களுக்கான கூட்டமைப்பு அறிவித்திருந்தாலும் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் இயங்கிவருகின்றன.

தமிழகத்தில் அரசின் பேருந்து சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. திரையரங்குகள் மாலை வரை இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இந்த முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.