ராம்குமார் உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

  • 19 செப்டம்பர் 2016

சென்னை பெண் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் தற்கொலைசெய்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனையைச் சுற்றி பலத்த காவல் போடப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் நீதித்துறை நடுவர் தமிழ்ச் செல்வி ராயப்பேட்டை மருத்துவமனையில் இது தொடர்பான விசாரணையைத் துவங்கியிருக்கிறார்.

Image caption ராம்குமார்

நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சமையல் அறைக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் உள்ள மின்சார ஒயரை கடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என சிறைத் துறை கூறியுள்ளது.

இதற்குப் பிறகு சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Image caption சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையின் முன்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஆனால், ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லையென்றும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர்கள் கோரியிருக்கின்றனர்.

மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் இந்த மரணம் குறித்து நீதிவிசாரணை கோரியுள்ளனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலுக்கு இன்று நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடுப்புகளும் போடப்பட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்