திமுக - காங்கிரஸ் - தமிழ் மாநில காங்கிரஸ்: புதிய அரசியல் கூட்டணி உருவாகிறதா?

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (திங்கள் கிழமை) சந்தித்துப் பேசினார்.

இதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார்.

Image caption கோப்பு படம்

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்திற்கு நீடித்தது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு, காவிரி - முல்லைப் பெரியாறு பிரச்சனை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பது உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து மு.க. ஸ்டாலினிடம் பேசியதாக தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் விரும்புகிறதா என்ற கேள்விக்கு, "மு.க. ஸ்டாலினை வந்து சந்தித்ததிலிருந்தே இது குறித்து புரிந்துகொள்ளலாம்" என்று கூறினார்.

விரைவில் திமுக தலைவரையும் சந்திக்கவிருப்பதாக வாசன் கூறினார்.

கருணாநிதியை சந்தித்தார் திருநாவுக்கரசர்

இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலையில் அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம், மு.க. ஸ்டாலின் - வாசன் சந்திப்பு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

Image caption கருணாநிதியை சந்தித்தார் திருநாவுக்கரசர்

அதற்குப் பதிலளித்த திருநாவுக்கரசர், இந்தக் கூட்டம் முடிந்ததும் தான் திமுக தலைவர் மு. கருணாநிதியைச் சென்று சந்திக்கவிருப்பதாகக் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

இதற்குப் பிறகு திமுக தலைவரின் இல்லத்திற்குச் சென்ற திருநாவுக்கரசர், அங்கு மு. கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி நீடிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பிறகு தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் - வாசன் சந்திப்பு குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இந்த சந்திப்புகள் இன்று நடந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்