காவிரி : மீண்டும் 10 நாட்களுக்கு தினமும் 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து செப்டம்பர் 21-ஆம் தேதி முதல், 10 நாட்களுக்கு தினமும் 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வைக் குழு, இன்று கர்நாடகாவுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

Image caption காவேரி மேற்பார்வைக்குழு கூட்டம்

உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட காவிரி மேற்பார்வைக் குழுவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளனர்.

நாளை, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் பதில்களை உச்சநீதிமன்றத்தில் காவிரி மேற்பார்வைக் குழு சமர்பிக்கவுள்ளது.

முன்னதாக, தமிழகத்துக்கு தினமும் 15,000 கன அடி நீரை செப்டம்பர் 16-ஆம் தேதி வரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு கடந்த 5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீர் திறப்பு தொடர்பான உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 20-ஆம் தேதி வரை, தினமும் 12,000 கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு கடந்த 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விவாதித்து, அதில் எடுக்கப்படும் முடிவுகளை செப்டம்பர் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதன்படி, காவிரி மேற்பார்வைக் குழு இன்று கூடி இது தொடர்பாக விவாதித்தது.

தமிழகம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பெய்த மழையின் அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, மற்றும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்