ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை நாளை நடக்குமென அறிவிப்பு

புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் ராம்குமாரின் உடலுக்கு நாளை பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption சென்னை உயர்நீதிமன்றம்

ராம் குமாரின் மரணம் குறித்து விசாரிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் என்ற இளைஞர் நேற்று மாலையில் மின்சார ஒயரை கடித்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராம்குமாரின் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தந்தை பரமசிவத்தில் சார்பில் இன்று (திங்கள் கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் 11-வது அமர்வு, பிற்பகலில் அவசர வழக்காக விசாரிப்பதாக அறிவித்தது.

அதேபோல பிற்பகலில் இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பரமசிவத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, இதுபோன்ற வழக்குகளில் அரசு மருத்துவர்கள் காவல்துறைக்குச் சாதகமாகவே அறிக்கை கொடுப்பதால் தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று கோரினார்.

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனைக்கென, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தடயவியல் துறையைச் சேர்ந்த செல்வகுமார், மணிகண்ட ராஜா, வினோத் ஆகிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Image caption ராம்குமார்

இவர்களோடு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை உதவி பேராசிரியரான பாலசுப்பிரமணியனும் உடன் இணைந்து இந்த பிரேதப் பரிசோதனயை நடத்த வேண்டும்; அது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், ராம்குமாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தன் வரம்பிற்குள் வராது என்பதால், இதற்கான தகுந்த அமர்வில் இந்த வழக்கைத் தாக்கல்செய்ய நீதிபதி கூறினார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மருத்துவமனைக்கு வந்தடைவதற்கு மாலை நேரம் ஆகிவிட்டதால் பிரேதப் பரிசோதனை நாளை நடக்குமென கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் டீன் நாராயண பாபு தெரிவித்திருக்கிறார்.

விசாரணைக்கு உத்தரவு

இதற்கிடையில் ராம்குமாரின் மரணம் குறித்த வழக்கை தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த மரணம் குறித்து, மூத்த அதிகாரி ஒருவரை வைத்து விசாரித்து இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் விசாரணை பிரிவின் கூடுதல் இயக்குனர் ஜெனரலுக்கு மனித உரிமை ஆணைய பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.