சென்னை: 2-வது கட்ட மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கம்

சென்னை விமான நிலையத்தை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

ஜெயலலிதா
படக்குறிப்பு,

மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை துவக்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா

தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட பயணிகள் சேவை தொடக்க நிகழ்ச்சியின் போது, விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு மற்றும் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இன்று துவங்கப்பட்டுள்ள இந்த புதிய பணிகள் சேவை வசதியின் மூலமாக, போக்குவரத்து நெரிசல் மிகுதியான நேரங்களில், சென்னை விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலான பயண நேரம் கிட்டத்தட்ட பாதியைய விட குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு நவீன நகரம் என்ற பெருமையை உருவாக்கித்தர வேண்டும் என்கிற தமது எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

படக்குறிப்பு,

மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உரையாற்றிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறும் போது, போக்குவரத்து நெரிசல் குறையும், வேகமாக குறிப்பிட்ட இடத்தை சென்றடைய முடியும் என்பதை காட்டிலும், நகர்ப்பகுதிகளில் மாசு வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.