சென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்: 5 பேர் போலீசில் ஒப்படைப்பு; 65 பேர் இடைநீக்கம்

சென்னைபச்சையப்பன் கல்லூரியில் படித்துவரும் ஐந்து மாணவர்களின் பைகளிலிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவர்கள் காவல்துறைவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Image caption கைப்பற்றப்பட்ட கத்திகள்

மேலும் 65 பேர் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்று காலையில் கல்லூரி துவங்கி சிறிது நேரத்தில் இரு மாணவர்களை வேறு சில மாணவர்கள் துரத்திக்கொண்டு வந்தனர். அப்போது ஒழுங்குமுறைக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர்கள் அதில் சில மாணவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்களில் 5 பேரது பைகளில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்றும், இரண்டு பேர் இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களுடன் வந்த மேலும் 65 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளதாக கல்லூரி முதல்வர் காளிராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரச்சனை காரணமாக கல்லூரி மதியத்திற்கு மேல் மூடப்பட்டது. நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

தொடரும் மோதல்கள்

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த மாணவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையின் அரசுக் கல்லூரிகளுக்குப் பேருந்தில் வரும் மாணவர்களிடம், பேருந்தின் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் யார் தலைவர் என்பது குறித்து தொடர்ந்து மோதல்கள் நடந்துவருகின்றன. இது போன்ற மோதலிலேயே இன்று இரண்டு மாணவர்கள் துரத்தப்பட்டனர்.

துரத்தப்பட்ட இரண்டு மாணவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

இம்மாதிரியான மோதல்களின் காரணமாக, சென்னையில் அரசுக் கல்லூரிகள் பெரும்பாலானவற்றின் வாயில்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கமாகியிருக்கிறது.