தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக வியாழனன்று (22-09-2016) இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

நேற்று வியாழன் இரவு சரியாக 10.15 மணிக்கு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் கடும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Image caption மருத்துவமனை முன்பு அதிமுக அமைச்சர்கள், தொண்டர்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலிருந்து நேராக க்ரீம்ஸ் சாலையில் இருந்த அப்போலோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

Image caption மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள்

முதல்வரின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் கிளம்பியதால் நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் முதல்வரின் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு

அதில், தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் உடலில் நீர் சத்து குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஷ்வநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை அறிந்து நள்ளிரவிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குவியத் தொடங்கினார்கள். தற்போது, க்ரீம்ஸ் சாலையில் அ.தி.மு.க தொண்டர்கள் மேலும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்