எட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது இந்தியா

முதல்முறையாக இரண்டு சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட், எட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக அவைகளின் சுற்றுப் பாதைகளில் நிலை நிறுத்தும் பணியை நிறைவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை iSro
Image caption பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் - 8 செயற்கைக் கோள்களை ஏவியது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இன்றைய ராக்கெட் தான் இந்திய ராக்கெட் பயணங்களில் மிக நீண்ட பயண நேரத்தை கொண்டிருந்ததாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இஸ்ரோவுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாற்றை படைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை iSRO
Image caption விண்ணில் சீறிப்பாயும் பி.எஸ்.எல்.வி சி.35 ராக்கெட்

இன்று திங்கட்கிழமை காலை சரியாக 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-35 வகையிலான அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின், பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்கான 371 கிலோ எடையுள்ள 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் இன்று நிறுவப்பட்டுள்ளது.

அது தவிர அமரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள 5 செயற்கைக் கோள்கள் மற்றும் மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள 'பிரதம்', பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள 'பிசாட்' ஆகிய செயற்கைக் கோள்களும் இன்று வெற்றிகரமாக அவைகளின் சுற்றுப் பாதைகளில் நிறுவப்பட்டுள்ளன.