உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா. தனித்துப் போட்டியிடும்: ஜி. கே. வாசன்

முன்னாள் மத்திய அமைச்சரும்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே. வாசன் இன்று விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தியில், வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

Image caption ஜி. கே. வாசன் ( கோப்புப் படம்)

தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகள் மாநில நலனை புறக்கணித்து தேசிய நலனை முன்னிறுத்தி வருவதாகவும், மாநில கட்சிகள் மாநில நலன்களை மட்டுமே முன்னிறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ள வாசன், தேசிய நலனுக்கு பங்கம் வராமல் மாநில நலன்களை முன்னிறுத்த தொடங்கப்பட்ட கட்சி தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சிக்கு 'சைக்கிள்' சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தொண்டர்களின் விருப்பத்தினை அறிய கூட்டங்கள் நடத்தப்பட்டது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வரும் உள்ளாட்சி தேர்தல் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவில் தன கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதியன்று, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்துப் பேசினார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு, காவிரி - முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து மு.க. ஸ்டாலினிடம் பேசியதாக தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் விரும்புகிறதா என்ற கேள்விக்கு, "மு.க. ஸ்டாலினை வந்து சந்தித்ததிலிருந்தே இது குறித்து புரிந்துகொள்ளலாம்" என்று கூறினார்.

அதே நாளில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான திருநாவுக்கரசர் திமுக தலைவரை சந்தித்துப் பேசினார்.

அதற்குப் பின், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைந்திருந்த கட்சிகளுடன் மாவட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக திமுக தெரிவித்தது.

"காங்கிரஸ் அழுத்தம் தரவில்லை"

ஜி.கே. வாசன் - மு.க. ஸ்டாலின் சந்திப்பிற்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் த.மா.கா உருவானது என்பதால், இரு கட்சிகளும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்குமா என்ற விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறக்கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்ததா என அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரிடம் பிபிசி கேட்டபோது, அகில இந்தியத் தலைமையோ, தாங்களோ கூட்டணி குறித்த எந்த அழுத்தத்தையும் திமுக-வுக்கு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

திமுக - த.மா.கா. கூட்டணி அமையாததற்குத் தாங்கள் காரணமல்ல என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.

இந்நிலையில், வாசனின் இன்றைய அறிவிப்பு அரசியல் வட்டாரங்களை வியப்படையச் செய்துள்ளது.

Image caption சட்டமன்ற தேர்தல் கூட்டணி

இதே போன்று, கடந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக அல்லது அதிமுக-வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இறுதியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்