சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

கோயம்புத்தூரில் கொல்லப்பட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த சசிகுமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Image caption இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலையை அடுத்து வெடித்த கோவை வன்முறை

கோயம்புத்தூர் மாவட்ட இந்து முன்னணியின் செய்தித் தொடர்பாளராக இருந்த சி. சசிகுமார் என்பவர் கடந்த வியாழக்கிழமையன்று இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலம் நடந்த வெள்ளிக்கிழமையன்று கோயம்புத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் பதற்றம் நிலவியது.

இந்தக் கொலை சம்பவம் துடியலூர் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டிருக்கிறார்.