இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 477 ஆமைகள் மீட்பு

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 477 ஆமைகளை மீட்டுள்ளதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Image caption மீட்கப்பட்ட ஆமைகள்

பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் சிலவற்றை இலங்கைக்கும் வேறு நாடுகளுக்கும் கடத்தவிருந்ததாக கிடத்த தகவலையடுத்து, மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கீழ வைப்பார் கிராமத்தை நோக்கிச் சென்ற ஒரு வாகனத்தை வழிமறைத்துச் சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் இருந்த 23 பெட்டிகளில் இருந்து 477 உயிருள்ள ஆமைகள் மீட்கப்பட்டதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அந்த வாகனத்தில் இருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Image caption மீட்கப்பட்ட ஆமை

கைப்பற்றப்பட்ட 477 ஆமைகளில் 473 ஆமைகள், மிகவும் அழியும் அபாயத்தில் உள்ள spotted black terrapin உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.

இவற்றில் சில வெளிநாடுகளில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சில ஆமைகள் உணவாகவும் பயன்படுகின்றன.

இதற்குப் பிறகு இந்தக் கடத்தலுக்குப் பின்னணியில் இருந்த நபர் மதுரைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார்.

இந்த ஆமைகள் வடஇந்தியாவிலிருந்து சாலை வழியாகக் கடத்திக்கொண்டுவரப்பட்டு, சென்னையில் வளர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியிலிருந்து இந்த ஆமைகள் நாட்டுப் படகின் மூலம் இலங்கைக்கு அனுப்பி, பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாக கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆமைகள் அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்