`காஷ்மீர் தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல்`- இந்திய ராணுவம் அறிவிப்பு

பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டு கோடு அருகே, காஷ்மீர் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எல்லையில் பதற்றம்

பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாதிகள் இந்தியா மீது தொடர் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளிக்க முயல்வோருக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதாக ராணுவம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் கண்டனம்

அதே நேரத்தில், துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறுவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

மாறாக, இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இதற்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

எல்லை தாண்டிய நடத்திய தாக்குதலை, துல்லிய தாக்குதல் என்று இந்தியா பொய் பிரசாரம் செய்வதாகவும், பாகிஸ்தான் மண்ணில் அத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா மேற்கொண்ட அத்துமீறலிலில் இரண்டு பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதால் அதை பலவீனமாகக் கருதக்கூடாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.