துல்லிய தாக்குதல்: இந்திய ராணுவம் சொன்னது என்ன?

காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய, கட்டுப்பாட்டுக் கோடு அருகே பயங்கரவாதிகளின் இயங்குதளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அந்தத் தாக்குதல் நடவடிக்கை புதன்கிழமை இரவு இடம் பெற்றதாகவும், அது நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங்

10 விடயங்கள் (அவரது வார்த்தைகளில்):

1. கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, ஜம்மு காஷ்மீரிலும் இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன.

2. அந்தத் தகவல்களின் அடிப்படையில், கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இயங்குதளங்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இது, பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவி செய்வோருக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. பலர் கொல்லப்பட்டார்கள்.

3. இந்த நடவடிக்கைகள் இப்போது முடிவடைந்துவிட்டன. அந்தத் தாக்குதல்களைத் தொடரும் திட்டம் இல்லை. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை நிறுத்துவதுதான் ராணுவத்தின் நோக்கம்.

4. கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. செப்டம்பர் 11 மற்றும் 18-ம் தேதிகளில் நடந்த தாக்குதல்கள் தவிர, மேலும் 20 ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை இந்திய ராணுவம் தடுத்துவிட்டது.

5. ஜி.பி.எஸ். கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள், அந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டன. அவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரைகள் உள்ளன.

6. அந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள் சிலர் பிடிபட்டனர். விசாரணையின்போது, பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

7. அந்த பயங்கரவாதிகளுக்கு சட்ட உதவி அளிக்கலாம் என பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டோம். ஊரி மற்றும் பூஞ்ச் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் கைரேகை மற்றும் டிஎன்ஏ பதிவுகளை வழங்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தோம்.

8. இந்திய ராணுவம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதற்கோ, நாட்டில் எந்தப்பகுதியிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவோ அனுமதிக்க முடியாது.

9. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலைத் தொடர்பு கொண்டு, புதன்கிழமை இரவு நடந்த தாக்குதல்கள் குறித்து தகவல் தெரிவித்துவிட்டேன்.

10. பாகிஸ்தான் மண்ணை, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் உறுதியளித்தது. அந்த அடிப்படையில், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் ராணுவம் (டிஜிஎம்ஓ) நமக்கு ஒத்துழைப்புத்தரும் என நம்புகிறோம்.