ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்: மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க அறிவுரை

உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Image caption ஜெயலலிதா

கடந்த 22ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா க்ரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை கூறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலும் முதல்வர் நலம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு முதல்வரின் உடல்நலம் குறித்து செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில், மாநிலம் முழுவதும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவில் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வரின் உடல்நலம், நன்றாகத் தேறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்