தமிழக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கவும் தயங்க மாட்டோம்: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் அல்லாமல், 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று திமுக வைத்துள்ள கோரிக்கை மீது அக்டோபர் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அக்டோபர் 17, 19 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்.

தமிழகத்தில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரம் வந்துவிட்டது. ஆனால், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டுக்கும் இடையில் பெருமளவு வித்தியாசங்கள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறைந்தபட்சம் 3 - 4 வாரங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இப்போது இந்த வழக்கில் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, வரும் 6-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.

உடனடியாகத் தீர்ப்பு வழங்குவதாகக் கூறிய நீதிபதிகள், தங்கள் தரப்பு கோரிக்கையில் நியாயம் இருந்தால் தேர்தலைத் தள்ளிவைக்கவும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்