பிஹார் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

Nitish Kumar படத்தின் காப்புரிமை Prashant Ravi
Image caption பிஹாரில் மதுவிலக்குக் கொண்டுவரப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது நிதீஷ்குமார் உறுதியளித்திருந்தார்.

பிஹாரில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்குச் சட்டம் செல்லாது என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சட்டமானது "சட்டவிரோதமானது, யதார்த்தத்திற்குப் பொருந்தாதது, அரசியல்சாஸனத்திற்கு விரோதமானது" என நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு பிஹாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தான் வெற்றிபெற்றால் பிஹாரில் முழு மதுவிலக்கு கொண்டுவரப்படும் என நிதீஷ் குமார் அறிவித்திருந்தார். அதேபோல, இந்த ஆண்டு ஏப்ரலில் மாநிலத்தில் மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆண்கள் குடிப்பதால், குடும்ப வன்முறையாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த தடையை பெரிதும் வரவேற்றனர்.

இந்தத் தடையால், பிஹாரில் பெரும் சமூக மாற்றம் நிகழும் என நிதீஷ்குமார் கூறியிருந்தார்.

மதுபானங்களை வீட்டில் வைத்திருந்தாலோ, குடித்தாலோ, சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களையும் தண்டிக்க வகைசெய்யும் பிஹாரின் மதுவிலக்குச் சட்டம் மிகவும் கொடுமையானது என விமர்சனங்கள் எழுந்தன.

ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை இது தொடர்பாக 13,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களையொட்டி, ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தற்போது மதுவிலக்கு அமலில் இருக்கிறது. கேரளா போன்ற சில மாநிலங்களில் பகுதியளவுக்கு, மது அருந்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் செய்தி குறித்து மேலும்