உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - இந்திய அரசு

இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த சூழலில், திடீர் திருப்பமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய காலக்கெடு முடிவடைய இருக்கும் நேரத்தில் இவ்வாறு தெரிவிப்பது ஏன் என்று நீதிபதிகள் வினா எழப்பியபோது, இதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்ற நேரத்தில் தான், எழுகின்ற சிக்கல்களை நாடாளுமன்ற அனுமதியோடு மேற்கொள்ள வேண்டியது தெரியவருகிறது என்று மத்திய அரசு பதிலளித்திருக்கிறது.

கருணாநிதி கண்டனம்

Image caption காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று கர்நாடகத்தில் நடத்தப்பட்ட போராட்டம்

இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு கூறியிருக்கும் விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?" என்பதை போல மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன என விமர்சனம் செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption காவிரி: மத்திய அரசு நிலைப்பாட்டுக்கு கருணாநிதி கண்டனம்

மேலும், விரைவில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதில் கொண்டே, மத்தியில் ஆட்சியில் இருப்போர் இந்தத் திடீர் முடிவினை, நடுநிலைமை தவறி எடுத்து, முழுக்க முழுக்க கர்நாடகாவின் குரலை எதிரொலிக்கும் ஊது குழலாக செயல்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் முடிவையும், கர்நாடக அரசின் முடிவையும் தமிழகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க முன் வர வேண்டும் என்றும், நெருக்கடியான இந்த நிலையிலாவது தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனு மீதான விசாரணையின் போதே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.

திமுக தலைவர் கருணாநிதியை போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் இந்த விவாகரத்திற்கு கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சூழ்ச்சியால் தான் தமிழத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியின் பிரதிநிதியாக பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் சுவாமிநாதன் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று தான் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் தரப்பிலான பிரதிநிதியின் பெயர் இன்று வரை அறிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்