காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி தமிழகத் தலைமைச் செயலர் கடிதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்றும் தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ், மத்திய நீர்வளத் துறை செயலர் ஷஷி ஷேகரிடம் கோரியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த ஏதுவாக அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் காவிரி பாயும் பகுதிகளைப் பார்வையிட்டு, 6ஆம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், அக்டோபர் 3ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, காவிரிப் படுகையை மிக வேகமாக ஆராய்ந்தால்கூட, அதற்கு ஒரு மாதம் ஆகும் என்பதால், உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவை அமைத்து, அணைகளை மட்டும் ஆராயலாம் என கூறியிருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு, நீர்வளத்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டியதோடு, நீதிமன்றம் கூறியபடியும் மத்திய அரசு கேட்டுக்கொண்டதன்படியும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கென தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் ஆர். சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல்செய்த இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென, தமிழக அரசு தன் கடிதத்தில் கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்