3 நாள் பயணமாக டெல்லி வந்தார் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் இந்தியப் பயணமாக இன்று முற்பகல் தனது பிரதிநிதிகள் குழுவுடன் புதுடெல்லி வந்தடைந்தார்.

படத்தின் காப்புரிமை PIB
Image caption இலங்கைப் பிரதமரை வரவேற்கும் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா

விமான நிலையத்தில், இலங்கைப் பிரதமரை, இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா வரவேற்றார்.

நாளை புதன்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கைப் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு மதிய விருந்து அளிக்கும் இந்தியப் பிரதமர், ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகள், இந்தப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை, குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்புப் பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.

முன்னதாக, நாளை காலை 11.30 மணிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைப் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்.

பிற்பகலி்ல், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

மாலையில், இந்தியக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார் இலங்கைப் பிரதமர்.

வியாழக்கிழமையன்று நடைபெறும் இந்திய பொருளாதார உச்சிமாநாட்டில், இந்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் தனிப்பொறுப்பு) நிர்மலா சீதாராமானுடன், ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவருடன், இலங்கைப் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்