தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து: இடைக்காலத் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாட்டில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Image caption சென்னை உயர்நீதிமன்றம் ( கோப்புப் படம்)

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளில் துவங்கி, மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் வரை பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது.

இந்நிலையில், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறைப்படி பின்பற்றப்படவில்லையெனக் கூறி திமுக-வின் சார்பில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேர்தல் தொடர்பான மூன்று அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிக்கை வெளியிட்டு, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலை ரத்துசெய்யக்கூடாது, விதிமுறைகளுக்கு உட்பட்டே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது, ஆகவே, தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் மனுவில் கோரப்பட்டது. மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்வதற்கு முன்பாகவே திமுக-வின் சார்பில் கேவியட் எனப்படும் முன் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனவே, இந்த வழக்கில் ஆஜரான திமுக தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் முன்பாக தங்களது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டுமெனக் கோரினார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. குமார், தேர்தல் நடைமுறைகள் பாதியளவுக்கு நிறைவடைந்துவிட்டதை சுட்டிக்காட்டியதோடு, எல்லா விதிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டிருப்பதால், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரினார்.

இதற்கு முன்பாக 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே உத்தேசத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பிறகு, திமுக தனது தரப்பு வாதத்தை எழுத்து மூலமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சுமார் 5 லட்சம் பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்