தமிழக அமைச்சர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை

தமிழகத்தின் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை மாநில பொறுப்பு ஆளுர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் சந்தித்துப் பேசினார். காவிரி விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது.

Image caption அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திப்பு

தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், இன்று மாலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துப் பேசினார். தமிழக தலைமைச் செயலர் பி. ராம மோகன ராவும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் அமைத்திருக்கும் காவிரி உயர் தொழில்நுட்பக் குழு தமிழகத்தை பார்வையிட வரவிருக்கும் நிலையில், என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து ஆளுநர் கேட்டதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சர் அது குறித்து விளக்கமளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, மருத்துவமனையில் உள்ள முதலமைச்சரின் உடல்நலம் குறித்தும் ஆளுநர் விசாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசின் தற்போதைய நிர்வாகம் குறித்து ஆளுநர் கேட்டறிந்ததாகவும் அது குறித்து தலைமைச் செயலர் பி. ராம மோகன ராவ் விரிவாக எடுத்துக்கூறியதாகவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது மருத்துவமனையில் இருக்கும் சூழலில் மூத்த அமைச்சர்கள், ஆளுநரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்