தமிழகத்திற்கு “இடைக்கால முதல்வர்” தேவையா? வெங்கையா நாயுடு கருத்து

பெரும்பான்மை பலம் கொண்டு ஆட்சி அமைத்திருக்கும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் 'இடைக்கால முதல்வர் தேவையா' என்பது போன்ற விவகாரங்களில் முடிவெடுக்க முடியும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Image caption பிரதமர் வெளிநாடு செல்லும் போது, துறை சார் அமைச்சர்களே பொறுப்புக்களை கையாளுவது போல, தமிழ் நாட்டில் மாநில அமைச்சர்கள் செயலாற்றலாம் - வெங்கையா நாயுடு

சென்னையில் இன்று தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் வித்யாசாகர் ராவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயடு இந்த கருத்தை வெளியிட்டார்.

மேலும், நாட்டில், பிரதமர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் போது, துறை சார்ந்த அமைச்சர்களே பொறுப்புக்களை தன்னிச்சையாக கையாளுவது போல, தமிழகத்திலும் இது போன்ற காலகட்டங்களில் மாநில அமைச்சர்கள் செயலாற்றுவார்கள் என தான் கருதுவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் ஏற்புடையது இல்லை என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

திமுக காங்கிரஸ் `முரண்பாடு`- திருநாவுக்கரசர் கருத்து

இதே போன்ற கருத்தை வெளியிட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசு, தாங்கள் திமுகவின் கருத்துடன் முரண்பட்டு இருந்தாலும் கூட கூட்டணி விவகாரத்தில் சிக்கல் இருக்காது என தெரிவித்தார்.

Image caption கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது - திருநாவுக்கரசர்

சென்னையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரும் இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சில விவகாரங்களில் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கக் கூடும் என்றார்.

அத்தோடு கூட்டணி என்பது தேர்தல் சமயங்களுக்கு மட்டும் தான் என்றும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் கிடையாது எனவும் திருநாவுக்கரசர் அப்போது குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூன்றாவது வாரமாக சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் சூழலில், இன்னும் அவர் எத்தனை நாள் மருத்துவமனையில் தங்கியிருக்க தேவை உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தான் இடைக்கால முதல்வரை அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும், இது போன்ற நடவடிக்கைகள் தேவையா என்கிற விவாதமும் தொடர்கிறது.

தமிழக ஊடகங்களிடம் பேசி வரும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேச்சாளர்கள் கூறுகையில், இடைக்கால முதல்வரை அறிவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும், முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்