அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மூன்று பெண்கள் வெற்றி

  • 11 அக்டோபர் 2016

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மூன்று இஸ்லாமியப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அலிகார் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், மூன்று மாணவிகள் ஒரே சமயத்தில் வெல்வது இதுவே முதல் முறை.

படத்தின் காப்புரிமை facebook/labibashervani
Image caption லபீபா ஷேர்வானி

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று இஸ்லாமிய பெண்களும், தங்கள் குடும்பங்களுக்கு நன்றி கூறுவதை மறக்கவில்லை.

மாணவர் சங்கத் தேர்தல்களில் தனது வெற்றிக்கு உதவிடும் வகையில் வாக்களித்த ஆண் மாணவர்களுக்கு நன்றி கூறுவதில் லபீபா ஷேர்வானிக்கு எந்த தயக்கமும் இல்லை.

தனது பெற்றோருக்கு ஒரே குழந்தையான 19 வயதான லபீபா, தனது தேர்தல் வெற்றி குறித்து கூறுவகையில், '' நாங்கள் அலிகாரை சேர்ந்தவர்கள். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் உள்ள நடைமுறைகள் எப்படிப்பட்டது என்பதை நான் அறிவேன். அதனால், அரசியலில் நுழைய முறைப்படும் முன், என் வகுப்பு மாணவர்கள் மற்றும் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன்'' என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ''குறைந்தது 10, 000 மாணவர்கள் மற்றும் ஏறக்குறைய 5000 மாணவிகளைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம் எங்களுக்கு ஆதரவளித்துள்ளதற்கு, உண்மையில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக தேர்தலில், மூன்று இஸ்லாமிய மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

கஜாலா அஹ்மத், லபீபா ஷேர்வானி மற்றும் சதாஃப் ரசூல் ஆகிய இந்த மூன்று மாணவிகளுக்கும், இது தான் முதல் தேர்தல் அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Gazala ahmad/youtube
Image caption பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்ற கஜாலா அஹ்மத்

வட இந்தியாவில் உள்ள இந்த மதிப்புமிக்க முஸ்லீம் பல்கலைக்கழகம், கடந்த காலத்தில் பல சர்ச்சைகளிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, கடந்த 2014-ஆம் ஆண்டில், மாணவர்களின் கவனத்தை பெண்கள் திசைதிருப்பி விடக்கூடும் என்று அதிகாரிகள் நம்பியதால், இந்த பல்கலைக்கழகத்தின் மத்திய நூலகத்தை அணுகுவதிலிருந்து பல்கலைக்கழக மாணவிகள் தடை செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.

இது குறித்து உடனடியாக ஊடகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பால், பெண்கள் நூலகத்தில் நுழைய தடை விதிக்கும் இந்த திட்டத்தை பல்கலைக்கழக அதிகாரிகள் திரும்பப பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அண்மைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மிகவும் உற்சாகமான மனநிலையில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை labiba sherwani/facebook
Image caption லபீபா ஷேர்வானி

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் உமர் பீர்ஜாடா இது குறித்து செய்தி நிறுவனங்களிடம் பேசுகையில், ''இம்முறை 17,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்தலில் வாக்களித்தனர்'' என்று குறிப்பிட்டார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மாணவர் அரசியலை உற்று நோக்கினால், கடந்த 2015-ஆம் ஆண்டில் நடந்த மாணவர் அமைப்பு தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.

அண்மையில் தேர்தலில் வென்ற கஜாலா குறித்து சுருக்கமாக கூறுகையில், ''எங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் மட்டும் இதற்கு வெற்றி பெற்றிருந்தார். இது தற்போது மூன்று என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. யாருக்கு தெரியும், ஒரு நாள் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக தேர்தலில், 20 பெண்கள் கூட போட்டியிட்டு, அவர்கள் அனைவரும் கூட வெற்றி பெறலாம்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.